களைகட்டிய பூ மார்க்கெட்

திருப்பூர் : பூ வரத்து அதிகரித்து, விற்பனையும் சுறுசுறுப்பாகியதால், ஆயுத பூஜை பண்டிகைக்கு ஒரு நாள் முன்பே, பூ மார்க்கெட்டில் விற்பனை களை கட்டியது. இன்று இரட்டிப்பு விற்பனை இருக்குமென வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்களுக்கு திருப்பூர் தயாராகி விட்டது. திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு பூ வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில், மூன்று டன் செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக 250 கிராம், 50 ரூபாய், கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்படும் செவ்வந்தி, நேற்று கிலோ, 280 ரூபாய்; 250 கிராம், 70 ரூபாய்க்கு விற்றது.

மல்லிகை பூ 250 கிராம், 230 முதல், 300 ரூபாய்; கிலோ, 900 முதல், ஆயிரம் ரூபாய். முல்லை கிலோ, 400 ரூபாய்; 250 கிராம், 100 ரூபாய்க்கு விற்றது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நாளை என்பதால், அரளிப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. வழக்கமாக, ஒரு கிலோ, 100 முதல், 150 ரூபாய் விற்கும்; நேற்று கிலோ, 300 முதல், 500 ரூபாய்க்கு விற்றது.

பூ வியாபாரிகள் கூறுகையில்,'வழக்கமாக வருவதை விட, பூக்கள் வரத்து அதிகமாக உள்ளது; நேற்று விலை குறைவு. விற்பனை பரவாயில்லை. பண்டிகை விற்பனை இன்று காலை முதல் இரவு வரை தான். இன்று பூ வரத்து, விற்பனைக்கு ஏற்ப, விலை இருக்கும். இன்று இரட்டிப்பு விற்பனை இருக்கும் என்பதால், ஆறு டன் பூக்கள் வரை தருவிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்,' என்றனர்.

நேற்று தாறுமாறு...

இன்று ஒழுங்காகுமா?

பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்றே, பூ மார்க்கெட் முன் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. டூவீலர், இலகு ரக வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் தடுமாறினர். இன்று பூ வாங்க வரும் வாடிக்கையாளர்களால் மேலும் கூட்டம் அதிகமாக வாய்ப்புள்ளது. போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கையாக 'பேரிகார்டு'களை நிறுவி பூ மார்க்கெட் முன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். இன்றும், நாளையும் கனரக வாகனங்கள் இவ்வழியாக நுழைய தடைவிதிக்க வேண்டும்.

Advertisement