'அறமனைத்தும் நிலைநாட்டும் திருவிளையாடலே நவராத்திரி'

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது.

ஆறாவது நாளான நேற்று முன்தினம், மகா அபிேஷகத்தை தொடர்ந்து, அம்மன் சிம்மவாஹினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பள்ளி குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடர்ந்து, புத்தரச்சல் இறையருள் மன்ற நிர்வாகி அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:

பண்டிகைகளை பெரிதும் நாம் கொண்டாடுவதில்லை; மொபைல்' போன்களுக்கு உள்ளே சென்றுவிட்டோம்; அதன் காரணமாக, இயல்புநிலையை மறந்துவிடுகிறோம். தமிழர்களின் விழாக்கள், பண்டிகைகள், இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட கொண்டாடப்பட்டன.

நவராத்திரி என்பது அறத்தை நிலைகாட்டும் அம்மனின் திருவிளையாடல். ஒன்பது நாட்கள் கொலுவிருந்த அம்மன், 10 வது நாளில் மகிஷாசுரனை அழித்தாள். நாமும், அறங்களை நிலைநாட்டவே நவராத்திரி கொண்டாடுகிறோம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் இறைவனை வழிபடுகிறோம்.

அம்மன் அருளால், நவராத்திரி கொண்டாட்டத்தின் போது மழை வருகிறது. நவராத்திரி விழாவை, அனைத்து வீடுகளிலும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement