'வெடி'க்கும் உள்ளங்கள்! வெடி விபத்தால் உடல், மனம், பொருளாதாரப் பாதிப்புகள்; ஆறுமோ ரணங்கள்; ஓங்கி ஒலிக்காத சாமானியர் குரல்கள்

நேற்றுமுன்தினம்மதியம் 11:45 மணி.

அம்மிக்கல்லும், பைக்குகளும் பறந்தன. காது ஜவ்வு பலருக்கும் நிஜமாகவே கிழிந்துவிட்டது.

திருப்பூர், பாண்டியன் நகரில் உள்ள பொன்னம்மாள் நகரில் உள்ள கார்த்திகேயன் என்பவரது வீட்டில், தயாரிப்புப்பணியின் போது, நாட்டு வெடிகள் வெடித்துச்சிதறிய போது நிகழ்ந்தவை, இவை.

இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது. வெடி வெடித்த வேகத்தில், இறந்தவர்களின் உடல்கள், 300 மீட்டர் துாரம் வரை உருக்குலைந்து துண்டுத் துண்டாகச் சிதைந்து பறந்தன. நல்வாய்ப்பாக, வீட்டுக்குள் மூட்டை, மூட்டையாக இருந்த மருந்துகள் மீது படரவில்லை. ஒருவேளை அதுவும் வெடித்து இருந்தால், உயிரிழப்பும், சேதமும் அதிகரித்திருக்கும்.

பொன்னம்மாள் நகர், ஏராளமான குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், கடைகள் நிறைந்த பகுதி; பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பீஹார், ஒடிசா உள்பட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சுவடே தெரியவில்லை



நாட்டு வெடிகள் வெடித்ததில், வீட்டின் ஒரு பகுதி அறை,வெளியே இருந்த மளிகைக்கடை ஆகியவை இருந்த சுவடே தெரியாமல் போயின. எதிரில் இருந்த மூன்று காம்பவுண்ட்களில், 25 ஓட்டு வீடுகள் பெரியளவில் சேதமடைந்தன.

சட்டவிரோதமாக நடந்த வெடி தயாரிப்பு, நான்கு உயிர்களைக் காவு வாங்கியது; 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

குழந்தைகள் பரிதாபம்



மூன்று காம்பவுண்ட்களில் வாட கைக்கு வசித்த தொழிலாளர் பலரும், தங்கள் குழந்தைளை வீட்டில் இருக்க வைத்து விட்டு, வேலைக்கு சென்ற போது விபத்து நடந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகள் மட்டும் இருவர். இதோ, சிலரது கதறல்கள்:

வீட்டு உரிமையாளர் சரஸ்வதி:

எங்கள் காம்பவுண்டில், எட்டு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். எல்லோரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். நாங்களும் வெளியில் சென்று விட்டோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் யாருமில்லாத காரணமாக, வீடுகள், பொருட்கள் மட்டும் சேதமடைந்தது. நல்ல வேளை, யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

பாதிக்கப்பட்ட வளர்மதி:

அன்றாடம் வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம். தற்போது, எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளோம். தனியார் மண்டபத்தில் இரவு தங்கினோம். அங்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளோம்.

விபத்தில் சிக்கிய கீதா:

வெடி விபத்து ஏற்பட்ட எதிர் காம்பவுண்ட் வீட்டில் முதல் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். அருகில் தாய் வசித்து வருகிறார். காலையில், நானும், கணவரும் பேசி கொண்டு உள்ளே அமர்ந்திருந்தோம். திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ஓடுகள் உடைந்து மேலே விழுந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை.வேகமாக வெளியேறினோம். ஓடுகள், சிதறி விழுந்த பொருட்களால் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது.

வெளியே வந்து பார்த்தால், எதிரே இருந்த மளிகைக்கடையையே காணோம். அப்போது தான் வெடி விபத்து ஏற்பட்டது தெரிந்தது. ரோட்டோரம் நின்றிருந்த டூவீலர், அம்மிக்கல் என, பல பொருட்கள் விழுந்து, காம்பவுண்ட் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. அனைத்தையும் இழந்து சோகத்தில் உள்ளோம்.

பாதிக்கப்பட்டோருக்குஇழப்பீடு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தங்கள் சோகத்தை உரக்கச்சொல்ல இயலாமல், உள்ளத்திற்குள் 'வெடி'க்கிறது அவர்களது உணர்ச்சிப்பீறிடல்!

கண்காணிப்பு தீவிரம்

அனைத்து வித உளவு பிரிவுகளை சேர்ந்த போலீசார், சட்டவிரோத வெடி தயாரிப்பு குறித்த கண்காணிப்பை தற்போதுதான் முடுக்கிவிட் டுள்ளனர். வருவாய்துறையினரும், வெடி கிடங்கில் உள்ள இருப்பு, வெளியில் அனுப்பப்படும் மருந்துகள் என, அனைத்தையும் கண்காணிக்கின்றனர். தீபாவளி நெருங்கி உள்ளதால், தற்போது பட்டாசு கடைக்கான அனுமதிகளில் எந்த வித அலட்சியமும் இருந்து விடக் கூடாது என உயரதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

மருத்துவ முகாம் அவசியம்

மனநல டாக்டர் ஒருவர் கூறியதாவது:

வெடி விபத்து, ரத்தம் வெளியேறி இறப்பு, கொடூர சம்பவங்களை அருகில் இருந்து பார்ப்பவர்கள் இனம் புரியாத பயம் மனதில் ஏற்படும். அந்த தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்குமனரீதியாக அச்சம் ஏற்படும். நீண்ட நாள் சிலருக்கு அதன் தாக்கம் இருக்கும். இதுபோன்று நிகழ்வு நடக்கும் போது பதட்டம்ஏற்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் காது உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யலாம். பலத்த வெடி சத்தம் காரணமாக செவித்திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியாதவர்களுக்கு கவுன்சிலிங், மருந்து, மாத்திரை வழங்கலாம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றியுள்ள மக்களின் மனநலம், உடல் நலத்தை பரிசோதனை செய்ய மருத்துவ முகாம் நடத்துவது அவசியம்.



-- நமது நிருபர் -

Advertisement