பாஸ்டேக் இல்லாத அரசு பஸ் டோல்கேட்டில் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் பாஸ்டேக் இல்லாத அரசு பஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு டெப்போவில் இருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் சேலம் மற்றும் சென்னை மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதில், ஸ்பேர் பஸ் மற்றும் குறைவான தொகையுடன் உள்ள பஸ்கள் மாடூர் டோல்கேட் வழியாக தினமும் செல்கிறது. அவ்வாறு உள்ள பஸ்களை டோல்கேட் நிர்வாகத்தினர் புகைப்படம் எடுத்து டெப்போ நிர்வாகத்திற்கு அனுப்புவர். உடன், டோல்கேட் வழியாக பஸ் சென்றதற்கான தொகை செலுத்தப்படும்.

இந்நிலையில், சென்னை மார்க்கத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டிஎன்32 எண்3326 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ் வீரசோழபுரம் டோல்கேட் வழியாக கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்தது. நேற்று காலை 10 மணியளவில் 'பாஸ்டேக்' இல்லாததால் பஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். டெப்போ நிர்வாகம் கடந்த 10 தினங்களாக சரிவர பணம் செலுத்தவில்லை எனவும், ரூ.1 லட்சத்தும் அதிகமான தொகை செலுத்த வேண்டும் எனவும் டோல்கேட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தியாகதுருகம் டோல்கேட் நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, காலை 10.30 மணியளவில் பஸ் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement