சிந்தாந்தம் வேறுபாடுகள் இருக்கு; ஒற்றுமையாக வேலை செய்வோம்: பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கம்

புதுடில்லி: 'எங்களுக்கும் பா.ஜ.,வுக்கு சிந்தாந்தம் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் ஒன்றாக வேலை செய்வோம்' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.


ஆங்கில செய்தி சேனலுக்கு, சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி: நான் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். 2047ம் ஆண்டிற்குள் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆந்திராவை முதன்மை மாநிலமாக மாற்ற இலக்கு வைத்துள்ளேன். தொழில்துறையில் வளர்ச்சியை உருவாக்க சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.


ஆந்திராவில் துறைமுகங்களில் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கும் பா.ஜ.,வுக்கு சிந்தாந்தம் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் ஒன்றாக வேலை செய்வோம். நாட்டிற்காக எப்படி வேலை செய்கிறோம் என்பது தான் முக்கியம்.


வளர்ச்சி பாதை




அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் நான் சவால்களை எதிர்கொண்டதில்லை. நாங்கள் மத்திய அரசின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவை வழங்குகிறார்கள். வளர்ச்சி பாதையை அடைய பல்வேறு திட்டங்களை துவக்கி உள்ளோம்.


பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதற்காகவும் நான் கடினமாக உழைத்து வருகிறேன். மத்திய மற்றும் மாநில நிதிகளை நாங்கள் திறமையாகப் பயன்படுத்துகிறோம். மேலும் சாமானியர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாமல் வரவை அதிகரிக்க புதுமையான வழிகளை ஆராய்ந்து வருகிறேன்.


முக்கிய பாடம்




நான் எப்போதுமே முழு தெலுங்கு சமூகத்திற்கும், ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறேன். எனது கவனம் இப்போது ஆந்திரா மாநிலத்தை கட்டியெழுப்புவதில் உள்ளது. தற்போது நான்காவது முறையாக பதவியேற்றுள்ளேன். நான் கற்றுக்கொண்ட ஒரு முக்கிய பாடம் என்னவென்றால், விரைவாகச் சாதிக்க வேண்டும் என்பது தான்.


எனது வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்தை பேணி வந்துள்ளேன். லட்டு தரம் மோசமடைந்து வருவதாக புகார் எழுந்ததுடன், போராட்டங்களும் நடந்தன. நாங்கள் லட்டு மாதிரிகளை ஆய்வு செய்ய அனுப்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement