ஓய்வு பெறுகிறார் ரபெல் நடால்: டென்னிஸ் அரங்கில் இருந்து

மாட்ரிட்: டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயினின் நடால் அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் 38. கடந்த 2001ல் ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் காலடி வைத்த இவர், ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம், 36 மாஸ்டர்ஸ் உட்பட 92 பட்டம் வென்றுள்ளார். களிமண்கள நாயகனான இவர், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 14 முறை சாம்பியன் ஆனார்.
பீஜிங் ஒலிம்பிக் (2008) ஒற்றையர், ரியோ ஒலிம்பிக் (2016) இரட்டையரில் தங்கத்தை தட்டிச் சென்ற நடால், இரண்டு முறை (2010, 2013) 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' தொடரில் 2வது இடம் பிடித்திருந்தார். கடந்த 2008, ஆக. 18ல் வெளியான ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். தவிர இவர், 209 வாரம் முதலிடத்தில் இருந்துள்ளார். ஒற்றையர் பிரிவில் 'கேரியர் கோல்டன் கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்ற மூன்று வீரர்களில் ஒருவராக நடால் உள்ளார்.


இடுப்பு பகுதி காயத்தால் பாதிக்கப்பட்ட நடால், 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதிலிருந்து மீண்ட போதும் சமீபகாலமாக நிறைய போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதில் ஒற்றையரில் 2வது சுற்று, இரட்டையரில் காலிறுதியோடு திரும்பினார்.

அடுத்த மாதம் ஸ்பெயினில் நடக்கவுள்ள 'டேவிஸ் கோப்பை பைனல்ஸ்' காலிறுதியில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியுடன் டென்னிஸ் அரங்கில் இருந்து விடைபெறப்போவதாக நடால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் நடால் வெளியிட்ட செய்தியில், ''கடந்த இரண்டு ஆண்டுகள் போட்டியில் விளையாட மிகவும் கடினமாக இருந்தது. வரம்புகள் இல்லாமல் என்னால் விளையாட முடியவில்லை என்று நினைக்கிறேன். ஓய்வு முடிவு கடினமானது. வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளது,'' என தெரிவித்திருந்தார்.



22 கிராண்ட்ஸ்லாம்


கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிகமுறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் ஸ்பெயினின் நடால் 2வது இடத்தில் உள்ளார். இதுவரை 22 பட்டம் வென்றுள்ளார். ஆஸி., ஓபனில் 2 (2009, 2012), பிரெஞ்ச் ஓபனில் 14 (2005-08, 2010-14, 2017-20, 2022), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 4 (2010, 2013, 2017, 2019) என 22 முறை சாம்பியன் ஆனார். முதலிடத்தில் செர்பியாவின் ஜோகோவிச் (24 பட்டம்) உள்ளார்.



36 மாஸ்டர்ஸ்
ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் நடால் 2வது இடத்தில் உள்ளார். இவர், 36 முறை கோப்பை வென்றுள்ளார். இதில் மான்டி-கார்லோ (11 பட்டம்), இத்தாலி (10), கனடா (5), மாட்ரிட் (5), இந்தியன் வெல்ஸ் (3), ஹம்பர்க் (1), சின்சினாட்டி (1) ஓபன் அடங்கும். முதலிடத்தில் செர்பியாவின் ஜோகோவிச் (40 பட்டம்) உள்ளார்.

Advertisement