500 கபடி வீரர்களை உருவாக்கிய 'வலிமை'  

ஆறாம் வகுப்பு படிக்கையில், அந்த சிறுவனுக்கு, தானும் ஒரு தடகள வீரராக வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது. தடகளத்தில் சாதித்து, பள்ளி படிப்பு முடிக்கும் முன், கபடி அணியின் கேப்டனானார். பாரதியார் பல்கலை அளவில் பளுதுாக்கும் போட்டியில் பங்கேற்று, 155 கிலோ எடை துாக்கி, முதலிடம் பெற்று தங்கம் வென்று அசத்தினார். பதக்க வேட்டை ஒருபுறம் இருந்தாலும், தன் பயிற்சியால் தொடர்ந்து படித்தும் வந்தார். உடற்கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராகி, தற்போது, சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளாராக உள்ளார்.

தான் கடந்து வந்த விளையாட்டு பாதை குறித்து, லாரன்ஸ், நம்முடன் பகிர்ந்தவை:

சிறிய வயதில் விளையாட்டில் வெற்றிபெற்ற அனுபவம், இனி எங்கு விளையாடினாலும் கட்டாயம் வெற்றியை பதிவு செய்து விட முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது. ஒவ்வொரு விளையாட்டுக்கான பயிற்சி மற்றும் நுணுக்கங்களை திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கற்றுக்கொண்டேன். போட்டியில் நானும் ஒரு வீரராக பங்கேற்ற நிலை மாறி, போட்டிக்கான பயிற்சியாளராக மாற, வீரர், வீராங்கனைகளுடன் நெருக்கம் அதிகமானது.

இருப்பினும், மைதானத்தில் இறங்கி ஒரு வீரராக விளையாட வேண்டும் என்ற ஆசை தீரவில்லை. மாவட்ட மூத்தோர் தடகளம் எந்த ஊரில் நடந்தாலும், உடனே பஸ் ஏறி விடுவேன். துாரமாக இருந்தால் முதல் நாளே சென்று, அதிகாலையில் 'வார்ம்அப்' செய்து தயாராகி விடுவேன். சங்கிலிக்குண்டு எறிதல், பளு துாக்குதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்பேன். இதுவரை, ஆறு முறை சங்கிலிக்குண்டு மாநில எறிதலில் பதக்கம் பெற்றுள்ளேன்.

அதிகளவில் மாணவர் கொண்ட அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, நிறைய வீரர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அதற்காக திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியை தேர்வு செய்ய பெருமுயற்சியெடுத்தேன். டி.ஆர்.பி., தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றதால், அந்த வாய்ப்பும் கிடைத்தது. 13 ஆண்டுகள் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து, 500 கபடி வீரர்களை மாவட்ட அணிக்கு, 35 ஜூடோ வீரர்களை மாநில அணிக்கும் அனுப்பியுள்ளேன்.

போட்டிக்கு சென்று திரும்பிய பின்,'சார்., நல்லா விளையாடினோம்; நீங்க பாத்தீங்களா... நாங்க நல்லா விளையாடினோமா' என மாணவர்கள் உற்சாகம்பொங்க கேட்பர். 'நம் பள்ளி அணி வெற்றி பெற்று விட்டது சார்' என அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் என் உழைப்பு தெரியும்; மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு, லாரன்ஸ் கூறினார்.



தொடர் பயிற்சியே முக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் சிறந்த வீரராக முடியும். தினசரி உடற்பயிற்சி, நடைபயிற்சி முடிந்தால், ஓட்டப்பயிற்சி மறக்க கூடாது. 59 வயதில் இன்றும் ஓட முடிகிறது. கோலுன்றி தாண்ட முடிகிறது என்றால், அதற்கு தொடர் பயிற்சியே காரணம். சிறந்த விளையாட்டு வீரர் ஆக நினைப்பவருக்கு கவனம் சிதறவே கூடாது. நேர மேலாண்மை மிக முக்கியம்.

Advertisement