சிலம்பம் திறமை; வெளிக்கொணரும் இளைஞர்

திருப்பூர், கோல்டன் நகரில், 'முத்தமிழ் சிலம்ப மையம்' என்ற பெயரில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக் கலையை கற்று கொடுத்து வருகிறார் கிருஷ்ணன் என்ற இளைஞர். சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்ப விளையாட்டில் தொடுமுறை பிரிவில், நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்...

மாநில அளவிலான போட்டியில் நடுவராக பங்கேற்றது, சிறந்த அனுபவம். மாநிலம் முழுக்க இருந்து, 72 பேர் போட்டியில் பங்கேற்று விளையாடினர். மாநில அளவில் தொடுமுறை போட்டியில் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றனர்.திருப்பூரை பொறுத்தவரை, சிலம்பத்தில் திறமையுள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். இருப்பினும், மாவட்ட அளவிலான போட்டிகளோடு நின்று விடுகின்றனர். மாநில போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதை உணர முடிந்தது. மாநில போட்டிக்கான விதிமுறையை கூட பெரும்பாலானோர் தெரிந்துகொள்வதில்லை.

மாவட்ட போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை மாநில போட்டியில் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் பட்சத்தில், திருப்பூருக்கும் பெருமை கிடைக்கும். சிலம்ப பயிற்சிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பயிற்சி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்குவதன் வாயிலாக, நடுவராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்; இது, தொழில்ரீதியாக பயன்தரும் என்பதையும் உணர முடிந்தது.

Advertisement