திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க முயற்சி

கோவை : கோவையில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், போஸ்டர் ஒட்டும் கலாசாரத்தை ஒழிக்கவும் மாநகராட்சி மூலமாக, மனதை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்படுகின்றன.

கோவை நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவை பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது. ஆய்வில், 80 முதல், 100 இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டது. இதை தடுக்க தற்போது துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மக்களின் மனதை கவரும் வகையில், வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. குப்பை கொட்ட மக்கள் வந்தாலும் அவ்விடத்தை பார்த்ததும் கொட்டாமல் திரும்பிச் செல்கின்றனர்.

மறுநாள் வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் கொடுக்கின்றனர். இம்முயற்சியை அனைத்து பகுதியிலும் செயல்படுத்த மாநகராட்சி துாய்மை பாரதம் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இதுவரை, 23 இடங்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோடு, தடாகம் ரோடு பகுதியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்களே தங்களது முயற்சியில் ஓவியம் வரைகின்றனர். துாய்மை பணியாளர் வீரமணி என்பவர், தனது திறமையால் ஓவியம் வரைகிறார். இதேபோல், பொது இடங்களில் போஸ்டர் ஒட்டும் கலாசாரத்தை தவிர்க்கும் வகையில், சுற்றுச்சுவர்கள் மற்றும் பாலங்களின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, 'கோவையில் பொது இடத்தில் குப்பை கொட்டு வருவோரின் மனதை மாற்றும் வகையில், ஓவியங்கள் வரைந்து வருகிறோம். திறந்தவெளியில் குப்பை கொட்டுவது படிப்படியாக குறைந்து வருகிறது.

''போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க, பாலங்களின் பக்கச்சுவர்கள் மற்றும் பொதுச்சுவர்களில் ஓவியம் வரையப்படுகிறது. கல்வி, கலாசாரம், மருத்துவம், தொழில்துறை சார்ந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன,'' என்றார்.

Advertisement