செம்மண் கொள்ளை, செங்கல் சூளைகள் நடத்தியவர்களில் 14 பேர் தலைமறைவு

கோவை : கோவையில் லோடு லோடாக செம்மண் கடத்தியவர்கள் மற்றும் சட்ட விரோதமாக செங்கல் சூளை நடத்தியவர்களில், 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர். இதில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 5 பேர் ஜாமினில் வெளிவந்து விட்டனர். இன்னும், 14 பேர் தலைமறைவாக இருப்பதாக, ரூரல் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி செம்மண் வெட்டி, லோடு லோடாக கடத்தப்படுகிறது.

'சீல்' வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட செங்கல் சூளைகள் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கி, சட்ட விரோதமாக செயல்படுகின்றன.

இதுதொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தல்படி, கோவை நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாராயணன் தலைமையில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி குமார் தலைமையிலான குழுவினர், இரு நாட்கள் கள ஆய்வு செய்தனர்.

வருவாய்த்துறையினர் மூலமாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெயரளவுக்கு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. செங்கல் சூளை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள், செம்மண் கடத்தியவர்களை கைது செய்யாமல், போலீசார் மவுனம் சாதிக்கின்றனர்.

13 வழக்குகள் பதிவு



இதுதொடர்பாக, கோவை ரூரல் போலீசாரிடம் கேட்டதற்கு, 'செம்மண் கடத்தல் மற்றும் சட்ட விரோத செங்கல் சூளை நடத்தியது தொடர்பாக, வருவாய்த்துறையினர் கொடுத்த புகார் அடிப்படையில், 13 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இவ்வழக்குகளில், 35 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில், 16 பேர் கைதாகியுள்ளனர்; 5 பேர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். 14 பேர் தலைமறைவாக உள்ளனர். செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், பொக்லைன் உள்ளிட்ட ஒன்பது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.

ஜாமினில் விடுவிப்பு



ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடந்து வரும் இவ்வழக்கில், கைதானவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளாமல், சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி, ஜாமினில் வெளியே வரும் அளவுக்கு போலீசார் சட்டப்பிரிவை பயன்படுத்தியிருப்பதை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விஷயத்தில், ஐகோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்காவிட்டால், இனி வரும் நாட்களில் மேற்குத்தொடர்ச்சி மலையே இருக்காத அளவுக்கு, கனிம வள சுரண்டல் நடக்கும் என்பது உறுதி.

'தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவு மற்றும் கலெக்டரின் செயல்முறையை மீறி, சட்டத்துக்கு எதிராக கனிம வள கொள்ளையர்கள் தொடர்ந்து விதிமீறல் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வனத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, காவல்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்,'' என்றார்.

Advertisement