கொலு வையுங்கள் வீடு கோவிலாகும்!

கோவை : 'தினமலர்' மற்றும் அதிசியா பிராபர்ட்டி சார்பில், நவராத்திரி பொம்மை கொலு விசிட், ஆர்.எஸ்.புரம், பொன்னையராஜ புரம், காந்தி பார்க் பகுதியில் நேற்று நடந்தது. நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ள, 20 வீடுகளுக்கு 'தினமலர்' குழுவினர் விசிட் செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் மேற்கு பெரியசாமி ரோடு வாக்மேன் அபார்ட்மென்டில் வசிக்கும் சவிதா மணிகண்டன் தன் வீட்டில் ஏழு படிகளில், நவ துர்க்கைகள், சிவன், பெருமாள் உருவ பொம்மைகளை அடுக்கி நேர்த்தியாக கொலு வைத்துள்ளார். அவர் கூறுகையில், ''நான் 15 ஆண்டுகளாக கொலு வைத்து வருகிறேன். நண்பர்கள், உறவினர்கள் தினம் கொலு பார்க்க வருகின்றனர். என் தோழி ஒருவருக்கு பல ஆண்டுகள் கல்யாணம் ஆகவில்லை. அவர் எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்து பிரார்த்தனை செய்தார் அடுத்த வருடமே திருமணம் நடந்து விட்டது.'' என்றார்.

அதே அபார்ட்மென்டில் வசிக்கும் பிரதீபா பட்டாபி ராமன், கோனியம்மன் கோவில் கோபுர பின்னணியில் கொலுவை மயிலிறகால் அலங்கரித்து இருந்தார்.

ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியில் வசிக்கும் சாந்தி ராமநாதன் கூறுகையில். ''நான் 30 வருடமாக கொலு வைக்கிறேன். நெருங்கி உறவினர்கள், நண்பர்கள் கொலு பூஜைக்கு வருவார்கள். இதில் எங்களுக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் இருக்கிறது'' என்றார்.

கோவை பொன்னுரங்கம் வீதியில் வசிக்கும், மாலினி ஒன்பது படிகளில் கொலு வைத்து அசத்தி இருந்தார். அவர் கூறுகையில், ''எங்கள் பாட்டி காலத்தில் இருந்து மூன்று தலைமுறையாக கொலு வைக்கிறோம். இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும்.'' என்றார்.

ஆர்.எஸ்.புரம் கிழக்கு ஆரோக்கியசாமி ரோடு பகுதியில் வசிக்கும் திவ்யா, அறுபடைவீடு, ஆண்டாள் பிறப்பு வளர்ப்பு மற்றும் ஆழ்வார்கள் செட் வைத்துள்ளார். அவர் கூறுகையில், ''என் அம்மா காலத்தில் இருந்து, 48 வருடமாக கொலு வைத்து வருகிறோம். நவராத்திரி வந்து விட்டால் வீடு கோவில் போல் இருக்கும்'' என்றார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசிக்கும் கிரிஜா வைத்தியநாதன் தசாவதாரம் செட், அம்பாள் செட், அத்திவரதர் என, 200க்கும் மேற்பட்ட கடவுள் உருவ பொம்மைகள் வைத்து அற்புதமாக கொலு அமைத்து உள்ளார். அவர் கூறுகையில் ''ஒன்பது நாட்களும் தவறாமல் பூஜை செய்கிறேன். மனம் நிம்மதியாக உள்ளது.'' என்றார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசிக்கும் சாரதா விஜய், கூறுகையில், நான் 50 வருடமாக கொலு வைத்து வருகிறேன். என்னை பொறுத்தவரை உலகம் அமைதியாகவும், மக்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.

சுண்டப்பாளையம் ரோடு ரமணி லேக் கார்டனில் வசிக்கும் சரஸ்வதி ஸ்ரீராம் சந்திரசேகரன் ஐந்து படிகளில் கொலு வைத்து இருந்தார். அவர் கூறுகையில், நவராத்திரி கொலு வழி வழியாக கொண்டாடும் பண்டிகையாகும். வருடம் தவறாமல் கொலு வைப்பது வழக்கம்'' என்றார்.

ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியில் வசிக்கும் வரலட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், 'என் அம்மா தவறாமல் கொலு வைப்பார். இந்த பொம்மைகள் எல்லாம் அவர் எனக்கு கொடுத்ததுதான். அவருக்கு பிறகு நான் கொலு வைத்து வருகிறேன். கொலு வைப்பதால் வீடு சுபிட்சமாக இருக்கிறது' என்றார்.

பொன்னையராஜபுரம் நான்காவது வீதியில் வசிக்கும் ரித்தன்யா பாலமுருகன் சுவாமிகள் வீட்டிலும், வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலிலும் கொலு வைத்துள்ளார். அவர் கூறுகையில், ''நாம் கடவுள் உருவங்களை பொம்மைகளாக செய்து கொலுவில் வைத்து வணக்கி வருகிறோம். நாம் எல்லோரும் கடவுள் செய்த பொம்மைகள். கடவுளின் கொலுவில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.'' என்றார்.

இன்று, 'தினமலர்' குழுவினர் சுந்தராபுரம், போத்தனுார், மதுக்கரை பகுதிக்கு கொலு விசிட் வருகின்றனர்.

இந்த நவராத்திரி கொலு நிகழ்ச்சியை, சென்னை சில்க்ஸ், மேளம், கண்ணன் காபி, மெடிமிக்ஸ், ஐயப்பா நெய், கோபுரம் மஞ்சள் துாள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றனர்.

Advertisement