கைகோர்த்த தன்னார்வலர்கள் உதவிக்கரங்கள் சாத்தியமானது

பல்லடம் வட்டாரத்தில், 40 கிராமங்களில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அவர்கள் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று, ஆண்டுதோறும் உணவு, புது துணி போன்றவற்றை வழங்கி வருகிறார், பல்லடம், சின்னுாரை சேர்ந்த தன்னார்வலர் கார்த்திகேயன்.

அவர் பகிர்ந்தவை:

கொரோனா காலகட்டத்தில்தான் பொதுமக்கள் பலர், உணவுக்காக கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதை உணர முடிந்தது. அப்போது, சேவா பாரதி அமைப்பு மூலம் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா பாதிப்பு முடிந்த பின், சேவைகளைப் பெற்றவர்கள் மீண்டும் உணவுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. எனவே, சேவையை தொடர்ந்து செய்ய திட்டமிட்டேன். இதற்காக என்னுடன், 50 தன்னார்வலர்களும் கைகோர்த்ததால், ஈகை அறக்கட்டளை என்ற அமைப்பு துவங்கி, இன்று முதல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, வறுமையில் உள்ள குடும்பத்தினருக்கு அறுவை சிகிச்சைக்கான உதவி உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம். மேலும், ஆதரவற்ற சடலங்களை புதைப்பது, ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களின் நலன் கருதி ஈகை அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி, இதில் மன திருப்தியுடன் பணியாற்றியும் வருகிறேன். உதவி கரம் நீட்டும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்கள் தாராளமாக ஈகை அறக்கட்டளையை நாடலாம்.

Advertisement