வாழ்த்துக்கள் டேனியல் பெலிசோ!

10


திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 141 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பெண் விமானி டேனியல் பெலிசோவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானத்தை பெண் விமானி டேனியல் பெலிசோ இயக்கினார். மாலை 5:40 மணிக்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, ஹைட்ராலிக் பெயிலியர் காரணமாக, தானாக உள்ளே செல்ல வேண்டிய சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், விமானத்தை எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், எரிபொருள் முழுவதும் இருந்ததால் உடனடியாக தரையிறக்க முடியாது.


இதுபோன்ற சூழ்நிலைகளில் விமானிகள் பதற்றம் அடைவார்கள். இதனால், பயணிகளுக்கும் அச்சம், குழப்பம் ஏற்பட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவும் செய்வார்கள்.ஆனால், இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க டேனியல் பெலிசோ, சாதுர்யமாக செயல்பட்டார். விமானத்தில் இருந்த எரிபொருளை காலி செய்வதற்காக விமானத்தை நடுவானிலேயே வட்டமடித்தார்.


பிறகு, தனது அனுபவத்தை பயன்படுத்தி இரவு 8:15 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் தரையிறக்கினார். இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளின் உயிரையும் பாதுகாத்த பெண் விமானி டேனியல் பெலிசோவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பயணிகள், உறவினர்கள், சமூக வலைதளவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பாராட்டு



முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement