எழுச்சி பெறுமா இந்திய ஹாக்கி * முன்னாள் கேப்டன் சர்தார் சிங் கணிப்பு

பெங்களூரு: ''எச்.ஐ.எல்., தொடர் காரணமாக இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு எழுச்சி பெறும்,'' என சர்தார் சிங் தெரிவித்துள்ளார்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. 2017க்குப் இத்தொடர் நடக்கவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு பின், இதன் ஆறாவது சீசன், வரும் டிச. 28- 2025, பிப் 1 வரை நடக்கவுள்ளது.
ஆண்கள் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் வரும் அக். 13-15ல் நடக்கிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங் 38, கூறியது:
ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் இம்முறை பெரியளவில், சிறப்பாக நடக்கவுள்ளது. முதன் முறையாக பெண்களுக்கான போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொடர் காரணமாக இந்தியாவில் ஹாக்கியின் பொற்காலம் மீண்டும் எழுச்சி பெறும். அதிக வீரர்கள் பங்கேற்பதால் சிறந்த அனுபவம் பெறலாம், அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
ஏனெனில் உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து, அல்லது அவர்களுக்கு எதிராக விளையாடலாம். இதனால் இந்திய அணிக்கு திறமையான வீரர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
தற்போதுள்ள முன்னணி வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப் சிங், சுமித் உள்ளிட்டோர், எச்.ஐ.எல்., தொடரில் தான் கண்டறியப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement