இந்தியா-வியட்நாம் மோதல் * நட்பு கால்பந்தில் இன்று...

புதுடில்லி: நட்பு கால்பந்தில் இன்று இந்தியா, வியட்நாம் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கால்பந்து தொடர் 2027ல் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று தொடரில் (2025 மார்ச்) பங்கேற்க, புதிய பயிற்சியாளர் மனோலோ மார்கஸ் தலைமையில் இந்திய அணி தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியட்நாம் சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு கால்பந்து தொடரில் பங்கேற்க திட்டமிட்டது.
வியட்நாம், லெபனான் அணிகள் மோத இருந்தன. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக, இத்தொடரில் இருந்து லெபனான் அணி விலகியது. இதையடுத்து வியட்நாம் அணியுடன் மட்டும், ஒரு நட்பு போட்டியில் பங்கேற்கிறது.
இப்போட்டி நாம் டின் நகரில் இன்று (மாலை 4:30 மணி) நடக்கவுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணிக்கு 'பிபா' தரவரிசையில் கூடுதல் புள்ளி கிடைக்கலாம். இதனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி, கடின பிரிவில் இடம் பெறுவதை தவிர்க்கலாம்.
கடந்த 2022ல் வியட்நாம் சென்ற இந்திய அணி, சிங்கப்பூர் அணிக்கு எதிராக 1-1 என 'டிரா' செய்தது. அடுத்த வியட்நாமிடம் 0-3 என தோற்றது. இம்முறை சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.
இந்திய அணி கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து கூறுகையில்,'' வியட்நாம் அணி கடினமானது. சர்வதேச அரங்கில் இந்த அணி சிறப்பாக செயல்படுகிறது. இதுபோன்ற அணிகளுக்கு எதிராக நாங்கள் துவக்கத்தில் நன்றாக விளையாடுகிறோம். பின் செய்யும் தவறுகள் காரணமாக போட்டியில் தோற்க நேரிடுகிறது. இம்முறை மீண்டு வர முயற்சிப்போம்,'' என்றார்.

Advertisement