த.வெ.க., மாநாட்டுக்கு தடபுடல் ஏற்பாடுகள்; பக்கா பிளான் செயல்படுத்தும் விஜய்!

11

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க வசதியாக, 16 குழுக்களை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


வரும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முழுவீச்சில் கட்சிப் பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், அக்டோபர் 27ம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



இந்த அறிவிப்பை தொடர்ந்து, மாநாட்டுக்கு பந்தக்கால் நடுவது முதல் நிர்வாகிகளுக்கு கட்சி வேஷ்டி அனுப்புவது வரையில் உள்ள அனைத்து பணிகளும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஏற்கனவே, மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மாநாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்களை அமைத்து த.வெ.க., தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு, பொருளாதாரக்குழு, சட்டநிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு, சுகாதாரக் குழு, மேடை ஒருங்கிணைப்புக்குழு, இருக்கை மேலாண்மை குழு, உபசரிப்புக்குழு, தீர்மானக் குழு, திடல்/பந்தல் அமைப்பு உதவிக்குழு, மகளிர் பாதுகாப்புக்குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு, வாகன நிறுத்தக்குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு, உள்ளரங்க மேலாண்மைக் குழு என மொத்தம் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனியாக தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement