8 மாதங்களில் 1490 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும், 1,141 குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளதை, ஆய்வு வாயிலாக சமூக நலத்துறை கண்டறிந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, குழந்தை திருமணங்கள் குறித்து வந்த 2,631 புகார்களில், 1,490 திருமணங்களை, சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவர்களை மீறி, 1,141 திருமணங்கள் நடந்துள்ளன. பெற்றோருக்கு தெரியாமல், 614 திருமணங்கள் நடந்துள்ளன.

மனநல ஆலோசனை



குழந்தை திருமணம் செய்தோருக்கு எதிராக, 706 பேர் மீது புகார் ரசீது, 667 மீது முதல் தகவல் அறிக்கை என, 1,373 பேர் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

குழந்தை திருமணத்தால் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதைத்தடுக்க, துறையின் சார்பில் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தை திருமண பணிக்குழு, கல்வித் துறை, உள்ளாட்சி, போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

ஊராட்சி அளவில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களிடம் இருந்து, குழந்தை திருமணம் குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, குழந்தை திருமணம் பற்றி புகார் அளிப்பதற்கான, '1098' என்ற இலவச தொலைபேசி எண் குறித்து, பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

புகார்கள் வந்ததும் போலீசாருடன் இணைந்து திருமணத்தை தடுத்து, பெண்ணை காப்பகத்தில் சேர்ப்பதுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். திருமணம் முடிந்திருந்தாலும், 18 வயது வரை பிரித்து, மன நல ஆலோசனை வழங்குகிறோம். பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை கண்காணிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:

பெண்ணின் திருமண வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒருநாள் முன்னதாக, திருமணம் செய்து வைத்தாலும், அது குழந்தை திருமணம் என்ற குற்றமாகவே கருதப்படும். 18 வயது பூர்த்தியான பெண்ணுக்கு தான், முழுமையான கருப்பை வளர்ச்சி, தரமான கருமுட்டை உருவாகும்.

கொத்தடிமைகள் அதிகம்



உளவியல், உடலியல் சார்ந்த புரிதல் ஏற்படும். கணவன், குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றின் மீதும் முதிர்ச்சி ஏற்படும்.

குழந்தை திருமணத்தால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு, பெண்ணின் உடல்நிலை மோசமடையும். ரத்த சோகை ஏற்பட்டு கணவன் - மனைவியின் உறவே சிக்கலாகும்.

சிறுவயது கர்ப்பத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறை, பிரசவ கால பிரச்னைகள், உயிரிழப்புகள், குறைப் பிரசவம், சவலை குழந்தைக்கான வாய்ப்புகள் அதிகம்.

பாலுாட்டுவது, குழந்தை வளர்ப்பால் மன அழுத்த பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளின் மூளை, இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் வளர்ச்சியும் முழுமையாக இருக்காது. இதனால், மருத்துவ செலவுகளும், பிரச்னைகளும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தை நல பாதுகாப்பு குழும உறுப்பினர் ஷீலா சார்லஸ் மோகன் கூறியதாவது:

தமிழக மலை பிரதேசங்களில் உள்ள பழங்குடியினரிடம், பெண் குழந்தைகள் பருவமடைந்ததும் திருமணம் செய்விக்கும் பழக்கம் உள்ளது. அதேபோல, கொத்தடிமைகள் அதிகம் உள்ள பின்தங்கிய மாவட்டங்களிலும், பெண் குழந்தைகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளது.

சில கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிக்குப் பின் படிக்க, நான்கைந்து கி.மீ., துாரம் நடந்து, வேறு கிராமத்துக்கு செல்லும் நிலை உள்ளது. இடையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இதை விரும்பாத பெற்றோர், பெண் குழந்தைகளை, எட்டாம் வகுப்புடன் நிறுத்தி, திருமணம் செய்து வைக்கின்றனர்.

விழிப்புணர்வு வேண்டும்



அடுத்தடுத்து பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பங்களிலும் சுமையை குறைக்க, இவ்வகை திருமணங்கள் நடக்கின்றன.

சென்னையில் கண்ணகிநகர் உள்ளிட்ட புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், அருகருகே குடியிருப்புகள் உள்ளன.

அங்குள்ள பெற்றோர் இருவரும் பகலில் வேலைக்கு செல்லும் நிலையில், பள்ளிக்கு செல்வது, பள்ளி விட்டு வருவது வரை, தனிமையில் வளரும் பெண் குழந்தைகள், மொபைல் போன் பயன்பாடு உள்ளிட்டவற்றால் காதல் வயப்பட்டு, பெற்றோருக்கு தெரியாமலேயே திருமணம் செய்து கொள்கின்றன.

தற்போது, பள்ளி மாணவியருக்கு, கல்லுாரி மாணவர்கள் அல்லது வெளியாட்கள் போதை சாக்லெட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்கின்றனர். அதன் வாயிலாக தன் வயப்படுத்தி, யாருக்கும் தெரியாமல் ஓடிப்போகும் கலாசாரம் தலைதுாக்கி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின், குழந்தைகளிடம் 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால், சமூக வலைதளங்கள் வாயிலாக நண்பர்களாகும் ஆண்களுடன் காதல் வயப்பட்டு, ரகசிய திருமணம் செய்து கொள்ளும் போக்கும் பெண் குழந்தைகளிடம் உள்ளது. இவர்கள் கர்ப்பமடையும் போதுதான், வெளியில் தெரியவருகிறது.

இதை அறியும் பெற்றோரில் சிலர், குழந்தைகளின் கர்ப்பத்தை கலைத்து, உறவினர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைக்கின்றனர்.

பதின்பருவத்து குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்காமல், சொந்தம், சொத்து, ஜாதி உள்ளிட்டவற்றுக்கு பயந்து, அவசர திருமணம் செய்விக்கும் பெற்றோரும் உள்ளனர்.

இவற்றை தடுக்க, பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், பெண் டாக்டர்கள் வாயிலாக பாலியல் கல்வியை கற்பிக்க வேண்டும்.

பதின்பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சி குறித்தும், பாலியல் சிக்கல்கள், இளம்வயது திருமணம், முறையற்ற கர்ப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நிகழ்கால உதாரணங்களுடனும், குறும்படங்களின் வாயிலாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர், பதின்பருவத்து மகன், மகளின் மொபைல் போன் பயன்பாடு குறித்தும், பிற பாலின நண்பர்கள் குறித்தும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். அந்த பருவத்தில் உள்ள குழந்தைகளை படிப்பு தவிர, விளையாட்டிலோ, கலை சார்ந்த விஷயங்களிலோ ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.



குழந்தை திருமணம் அதிகம் நடந்த மாவட்டங்கள் மற்றும்

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விபரம்: மாவட்டம்/ புகார்/திருமணம் நிறுத்தம்/ நடந்தவை/வழக்குநெல்லை/ 139 / 24 / 115 / 64ஈரோடு / 138 / 25 / 113 / 94பெரம்பலுார்/ 95 / 27 / 68 / 11கோவை / 91 / 25 / 66 / 90திண்டுக்கல் / 129 / 70 / 59 / 42திருப்பூர் / 99 / 50 / 49 / 14நாமக்கல் / 91 / 43 / 48 / 71திருப்பத்துார்/ 120 / 75 / 45 / 50திருவாரூர் / 58 / 18 / 40 / 29தஞ்சாவூர் / 68/ 29 / 39/ 13







-- நமது நிருபர்- --

Advertisement