மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசி : விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதிகளில், 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும், 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது; சரவெடி தயாரிக்க கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, இப்பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.


இதனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்தாலே பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படும். மழை பெய்து ஈரம் காயாத நிலையில், பட்டாசு உற்பத்திக்கு வழியில்லை.


வெயில் அடிக்காவிட்டால் பட்டாசுகளை காய வைக்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே உற்பத்தி சதவீதம் குறைந்த நிலையில், மழையால் மேலும் உற்பத்தி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.



இதனால், பட்டாசு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. தீபாவளி நெருங்குவதால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் உற்பத்தி பாதிப்பால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:



சிவகாசி பட்டாசு ஆலைகளில், தீபாவளி சீசனில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெறும். இந்தாண்டு மழை காரணமாக 500 கோடி ரூபாய் வரை உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கும் நிலை உள்ளது. பட்டாசு கடைகளுக்கு மாவட்ட வாரியாக அனுமதி வழங்கப்பட்டு வருவதால், உள்ளூர் வியாபாரிகள் கொள்முதலுக்கு வரத் துவங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement