பாபா சித்திக் கொலையாளி நாடகம்: செக் வைத்தது மும்பை கோர்ட்!

3

மும்பை: மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க, வயதை காரணம் காட்டி குற்றவாளி போட்ட நாடகம் அம்பலமானது.


கடந்த சனிக்கிழமை (அக்.,12) இரவு மும்பையில் உள்ள நிர்மல் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் சேர்ந்த கும்பல் பொறுப்பேற்றுள்ளது. சிறையில் இருந்தபடியே லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்தக் கொலையை செய்ய இவர்கள் தலைக்கு ரூ.50 ஆயிரம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தில் தொடர்புடைய உத்தரபிரதேசத்தைச் சேர்நத் தர்மராஜ் காஷ்யப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த குர்மயில் பல்ஜித் சிங் உள்பிட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை அக்டோபர் 21ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இதனிடையே, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு தர்மராஜ் காஷ்யப் தன்னை மைனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது ஆதார் கார்டில் 2003ம் ஆண்டு பிறந்திருப்பதாகவும், இதன்மூலம் அவருக்கு 21 வயது என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காஷ்யப்பின் ஆதார் கார்டில் பெயர் மாறி உள்ளதால் சந்தேகம் எழுந்தது. மேலும், அவரிடம் பிறந்த ஆண்டு குறித்து அறிவதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. எனவே, காஷ்யப்பின் வயது விவகாரத்தில் உண்மை தன்மையை அறிய, எலும்பு வளர்ச்சி பரிசோதனையை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.


அதன்படி, எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, காஷ்யப்பின் எலும்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு 21 வயது என்பது உறுதியானது. இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் அனுப்பி வைக்கப்பட்டார்.


இதனிடையே, மும்பை போலீசார் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய புனேவைச் சேர்ந்த 28 வயது நபரையும் கைது செய்தனர். அதுமட்டுமில்லால், இந்த கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் முகமது ஷீஷான் அக்தர்,21 என்பதையும் கண்டறிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement