மழைக்காலத்தில் பள்ளிக்கு விடுமுறை; யார் முடிவு எடுக்கலாம்: அமைச்சர் பதில் இதுதான்!

6

கோவை: மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுக்கலாம். அவர்கள் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.


கோவை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:வடகிழக்கு பருவமழை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆய்வு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் அதிகமான மழை பெய்யும் போது, இன்று பள்ளி செயல்படுமா? விடுமுறையா? என கேள்வி கேட்கப்படுகிறது.


மழை எந்த மாவட்டத்தில் அதிகமாக பெய்தாலும் சரி, அந்த மாவட்ட கலெக்டர் பள்ளி செயல்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுக்கலாம். மாணவர்களின் கவனம் படிப்பில் இருக்க வேண்டும். மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி, சந்தேகங்களுக்கு ஆசிரியரிடம் தெளிவு பெற்று, பொதுத்தேர்வை எழுத வேண்டும்.


மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தம் தருகின்றனர். மத்திய அரசின் கட்டளைகளை ஏற்றால், மட்டுமே நிதி ஒதுக்குவோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. நன்றாக செயல்படும் தமிழகம் போன்ற மாநிலங்களிடம் ஆரோக்கியமான அணுகுமுறையில் நடக்க வேண்டும். மத்திய அரசு கொடுக்கவில்லை என்றாலும், தமிழக அரசின் சொந்த நிதியை பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement