ஊர் உள்ளவரை...கார் உள்ளவரை... பாலமே பாதுகாப்பு!

25

சென்னை; சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன் யோசனையாக இன்றே வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை மக்கள் நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.


@1brமழையும் வெயில் இவற்றில் எது வந்தாலும் முதலில் சென்னை தான் அனைவரின் மனதுக்கும் நினைவு வரும். வெயிலுக்கும், மழைக்கும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தலைநகர் சென்னை சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் மழை காலத்தில் சொல்லவே வேண்டாம்.

முக்கிய பகுதிகளாக கருதப்படும் மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, போரூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் மழை வெளுத்து வாங்கினால் வீடுகள், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிய சம்பவங்கள் பல உண்டு. எனவே ஒவ்வொரு முறை மழை முன் எச்சரிக்கையின் போது சொகுசு கார்கள் வைத்திருப்போர், நகரின் ஏதேனும் ஒரு இடத்தில் உயர்ந்து காணப்படும் மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு வந்துவிடுவர்.

மழை ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின்னர், சாவகாசமாக கார்களை திரும்பவும் தமது வீடுகளுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ எடுத்துச் சென்றுவிடுவர். இந் நிலையில் சென்னையில் இன்று முதலே மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை, அக்டோபர் 16ம் தேதி அதி கனமழை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் என்னும் போது 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகும்.

ரெட் அலர்ட்டை வானிலை மையம் வெளியிட்டு உள்ள நிலையில் சென்னையில் கார் வைத்திருக்கும் பலரும் இப்போது வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். சிலர் இன்றே மல்டி லெவல் பார்க்கிங் உள்ள பகுதிகளில் கார்களை நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.

வேளச்சேரி மற்றும் அதன் சற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், கார்களை அங்குள்ள உயரமான மேம்பாலத்தின் ஓரம் நிறுத்தி இருக்கின்றனர். பாலத்தின் ஒரு பகுதியில் கார்கள் நீண்ட தூரம் அணி வகுக்க ஆரம்பித்து இருக்கின்றன. பொருள் இழப்பையும், மன உளைச்சலையும் தவிர்க்கும் பொருட்டே இப்படி ஒரு நடவடிக்கை என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.

சென்னை மக்கள் என்றுமே உஷார் என்று பலரும் கூறுவது உண்டு. அதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் கார்களை பார்க்கிங் செய்து சபாஷ் சொல்ல வைத்திருக்கின்றனர் சென்னை மக்கள்.


உரிமையாளர்களுக்கு அபராதம்



வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

Advertisement