பாபா சித்திக் மகனையும் கொலை செய்ய திட்டம்: கொலைகாரர்கள் பகீர் தகவல்!

5


மும்பை : மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகனையும் கொலை செய்ய கொலைகாரர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.


கடந்த சனிக்கிழமை, இரவு மும்பையில், அம்மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உ.பி.,யை சேர்ந்த தர்மராஜ் காஷ்யப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த குர்மெல் பல்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷிவ்குமார் கவுதம் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படைகள் மும்பை, உ.பி., ஹரியானா மாநிலங்களில் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.


இதனிடையே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்: பாபா சித்திக் உடன் சேர்ந்து அவரது மகனும் எம்.எல்.ஏ.,வுமான ஜீஷன் சித்திக்கையும் கொலை செய்ய திட்டமிட்டோம். அதற்காக பணமும் பெற்றோம். கொலை நடந்த இடத்தில் தந்தையும், மகனும் இருப்பார்கள் என எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், யார் கிடைத்தாலும் கொலை செய்யும்படி தெரிவித்தனர்.

மிளகாய்ப்பொடி தூவல்



தசரா கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது, பாபா சித்திக்கை கொல்ல குர்மெல் பல்ஜித் சிங் மற்றும் கஷ்யாப் ஆகிய இருவரும் தான் திட்டமிட்டோம். ஆனால், போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் கூட்டம் ஆகியவற்றை கண்டதும், முதலில் நான் சுடுவதாக ஷிவ்குமார் கூறினான். அதன்படி, அவன் முதலில் 6 முறை சுட்டான். அப்போது கையில் வைத்து இருந்த மிளகாய்பொடி மற்றும் பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை போலீசார் மீது தூவினோம். கூட்டத்தை பயன்படுத்தி ஷிவ்குமார் தப்பி சென்றுவிட்டான். ஆனால், நாங்கள் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்காணிப்பு



இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: இந்த கொலைக்கு ஷிவ்குமார் தான் தலைவனாக செயல்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் தங்களை அப்பாவிகள் எனக்கூறுகின்றனர். கொலையை ஷிவ்குமார் தான் செய்ததாக தெரிவிக்கின்றனர். கொலைகாரர்கள், குல்லா பகுதியில் தங்கியிருந்தனர். சில நாட்களாக பந்தரா பகுதிக்கு ஆட்ரோரிக்ஷாவில் வந்து பாபா சித்திக் மற்றும் அவரது மகன் வந்து செல்லும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.


பாபா சித்திக்கிற்கு 24 மணி நேரமும் 3 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது, ஒரு போலீசார் உடன் இருந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


பாபா சித்திக்கின் மகன் வந்த்ரே கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அவரை காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்திருந்தது.

Advertisement