கேமிரான் கிரீன் விலகல்: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து

மெல்போர்ன்: முதுகுப்பகுதி காயத்தால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் கிரீன் விலகினார்.

ஆஸ்திரேலியா செல்வுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' கேமிரான் கிரீன் 25, விலகினார். கடந்த மாதம் இங்கிலாந்து பயணத்தின் போது ஏற்பட்ட முதுகுப்பகுதி காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், அடுத்த 6 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும்.

எனவே இந்தியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர் டிராபி', இலங்கைக்கு எதிரான டெஸ்ட், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் கிரீன் பங்கேற்கமாட்டார். தவிர இவர், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., 18வது சீசனிலும் விளையாடுவது சந்தேகம்.


ஸ்மித் 'நம்பர்-4': கிரீன் விலகல் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் 'பேட்டிங்' வரிசையில் மாற்றம் ஏற்படலாம். டேவிட் வார்னரின் ஓய்வுக்கு பின் துவக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித், மீண்டும் 4வது இடத்தில் களமிறங்க உள்ளார். இதனை தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதி செய்தார். இதனால் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்காக விளையாடி வரும் கேமிரான் பென்கிராப்ட் அல்லது சாம் கான்ஸ்டாஸ் துவக்க வீரராக களமிறங்கலாம்.

Advertisement