தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி: ரஞ்சி கோப்பையில் கலக்கல்

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி, இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 203, தமிழகம் 367 ரன் எடுத்தன.

மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 35/5 ரன் எடுத்திருந்தது. அர்பித் (15), ஜாக்சன் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் குர்ஜப்னீத் சிங் 'வேகத்தில்' அர்பித் (22), தர்மேந்திரசிங் ஜடேஜா (0) வெளியேறினர். சாய் கிஷோர் 'சுழலில்' கேப்டன் ஜெயதேவ் உனத்கட் (15) சிக்கினார். சோனு யாதவ் பந்தில் ஷெல்டன் ஜாக்சன் (38), யுவராஜ்சிங் தோடியா (4) அவுட்டாகினர்.


சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 94 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 6, சோனு யாதவ் 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை குர்ஜப்னீத் சிங் வென்றார். தமிழக அணிக்கு 7 புள்ளி வழங்கப்பட்டது.


மும்பை தோல்வி: வதோதராவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் பரோடா 290, மும்பை 214 ரன் எடுத்தன. பரோடா அணி 2வது இன்னிங்சில் 185 ரன் எடுத்தது.


பின், 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு சித்தேஷ் லத் (59) ஆறுதல் தந்தார். மும்பை அணி 2வது இன்னிங்சில் 177 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.

இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் (4+6) சாய்த்த பரோடாவின் பார்கவ் பாட், ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Advertisement