சாத்துாரில் தடை பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு

சாத்துார்: சாத்துாரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வாறுகால்களில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் கேரிப்பை, தட்டு, டம்ளர், கிண்ணம், இலை போன்ற போன்ற பொருட்கள் நகராட்சி பகுதியில் அதிகளவில் கழிவுகளாக சேர்கின்றன. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் சாத்துார் நகராட்சி கடந்த காலங்களில் அபராதம், பறிமுதல் என எடுத்த கடும் நடவடிக்கையால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் ஓட்டல்கள், மளிகை கடை, டீக்கடை, வடை கடை, பானிபூரி கடைகள், பாஸ்ட் புட் கடைகளிலும், சிக்கன் ஸ்டால்களிலும் பயன்படுத்தப்படுவதை கண்டும் காணாமல் உள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பாணி பூரி கடைகளில் பிளாஸ்டிக் கிண்ணம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு உடனடியாக குப்பைக்கு வந்து விடுவதால் அதிகளவில் கழிவுகளாக சேருகின்றன. ஆங்காங்கே வீசப்படும் இது போன்ற பிளாஸ்டிக் கழிவுகள் காற்று வீசும் போது அருகில் உள்ள வாறுகால்களில் விழுந்து குப்பையாக சேர்ந்து விடுகின்றன.

இதன் காரணமாக கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதோடு கொசு உற்பத்தியும் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் நகரில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.

Advertisement