விருதுநகரில் மேன்ஹோல் உடைந்ததால் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ராமமூர்த்தி ரோட்டில் தற்போது மேன்ஹோல் உடைந்து உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை ரோட்டிற்கு செல்லும் ராமமூர்த்தி ரோட்டில் பாதாளச்சாக்கடையில் கழிவு நீர் செல்ல முடியாமல் பல மாதங்களாக மண் நிரம்பி இருந்தது. இதனால் இப்பகுதியில் குழாய்கள் மூலம் கழிவு நீரை வெளியேற்ற ஏதுவாக பேரிகார்டுகளை வைத்து ரோட்டை மறித்திருந்தனர். இது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து பிரச்னை சரிசெய்யப்பட்டு பேரிகார்டுகள் அகற்றப்பட்டது.

ஆனால் இங்குள்ள மேன்ஹோலை முறையாக பராமரிக்காததால் சேதமாகி தற்போது உடைந்து விட்டது. மழைக்காலம் துவங்கி விட்டதால் பாதாளச்சாக்கடைகளில் அதிகமான கழிவு நீர் செல்கிறது. இப்பகுதியின் உடைந்த மேன்ஹோல் வழியாக துர்நாற்றம் வெளியேறுவதால் கடந்து செல்பவர்கள் மூச்சுத்திணறுலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் உடைந்து பள்ளமான மேன்ஹோலில் வாகனங்களில் செல்பவர்கள் மோதி விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ராமமூர்த்தி ரோட்டில் உள்ள உடைந்த மேன்ஹோலை சீரமைத்து விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement