வசதிகள் இல்லாத பரளச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

திருச்சுழி அருகே பரளச்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1988 ல் கட்டப்பட்டது. இங்கு, செங்குளம், பூலாங்கால், கீழ்க்குடி, வாகைகுளம், வடக்கு நத்தம், தெற்கு நத்தம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வர். மருத்துவமனை கட்டடம் பல பகுதிகளில் சேதம் அடைந்து உள்ளது.

இங்குள்ள மினரல் வாட்டர் பிளான்ட் சரிவர வேலை செய்வதில்லை. ஜெனரேட்டர் பழுதாகியுள்ளது. இன்வெர்ட்டர் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் சிகிச்சை செய்ய சிரமப்படுகின்றனர். சுற்று சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சுடு தண்ணீர் வைக்கக்கூடிய ஹீட்டர் வசதி இங்கே இல்லை செவிலியர் குடியிருப்பு போதுமானதாக இல்லை. சிசிடிவி., கேமரா வசதிகள் இல்லை.

இங்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் மருத்துவ அலுவலர்கள், அவசரகால உபயோகத்திற்கு ஜெனரேட்டர் வசதி உட்பட வசதிகளை மாவட்ட மருத்துவ நிர்வாகம் செய்து தர வேண்டும்.

இதுகுறித்து இந்திய கம்யூ., திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் : பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உட்பட, கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

Advertisement