இன்று முதல் மூன்று நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள்

1

சென்னை: கன மழையால் பயணியர் பாதிக்கப்படாமல் இருக்க இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழக்கமானதைவிட கூடுதல் ரயில்கள் இயக்குவதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


காலை 8:00 முதல் 11 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை: சென்ட்ரல் - பரங்கிமலை தடத்தில், 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விம்கோநகர் பணிமனை - விமான நிலையம் தடத்தில், 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.


வண்ணாரப்பேட்டை - ஆலந்துார் வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.


காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, விமான நிலையம் - விம்கோ நகர்; ஆலந்துார் - சென்ட்ரல் என இரு வழித்தடங்களிலும், 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.


கூடுதல் மெட்ரோ இயக்கப்படுவதால், சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள், தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. விமான நிலையத்திற்கு செல்லும் பயணியர், ஆலந்துார் மெட்ரோவில் மாறி, விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும், வானிலையை பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றி அமைக்கப்படும்.


முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில், குறிப்பாக, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணியர் தங்கள் வாகனங்களை இன்று முதல் 17ம் தேதி வரை நிறுத்த வேண்டாம். இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement