குப்பை மேட்டில் மின்கம்பங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் செங்குளம் கண்மாய் நீர்வரத்து பாதையை ஒட்டிய குப்பை மேட்டில் மின்சார ட்ரான்ஸ்பர் அமைக்க மின்கம்பங்கள் நடப்பட்டிருப்பது பாதுகாப்பானதா என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடமலைகுறிச்சி கண்மாயிலிருந்து வெளியேறும் மழை நீரும், பல்வேறு தெருக்களின் கழிவு தண்ணீரும் செல்லும் கால்வாயாக செங்குளம் கண்மாய் நீர் வரத்து பாதை உள்ளது. இப்பகுதியில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு பாலத்தின் கண்கள் அடைபட்டு வந்தது.

குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், நீர்வரத்து பாதையை சீரமைக்கவும் வேண்டுமென செங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் கோரி வந்தனர். இதனையடுத்து தற்போது நீர்வரத்து பாதையில் குப்பைகள் கொட்டுவது குறைந்துள்ளது.

ஏற்கனவே கொட்டிய குப்பை மேட்டிலும், நீர்வரத்து பாதையை ஒட்டி மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க தற்போது மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. போதிய ஆழமின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த மின்கம்பங்கள் பாதுகாப்பானதா என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சரியான திட்டமிடுதலுடன் விபத்துக்கள் ஏற்படாத வகையில் மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement