அனுபவமுள்ள மூத்த அமைச்சர்கள் தள்ளி வைக்கப்படுகின்றனர்

காரியாபட்டி: தமிழகத்தில் அனுபவமுள்ள மூத்த அமைச்சர்கள் தள்ளி வைக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

காரியாபட்டியில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.,உதயகுமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு 45 முதல் 55 சதவீதம் மழை பெய்யும்.

விவசாயம், குடிநீருக்கு நீரை சேமிக்க வாய்ப்பு. அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டது.

அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொண்டோம். பருவ மழையை எதிர்கொள்ள அரசு பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் இல்லை. ஒரே பல்லவியை பாடிக் கொண்டிருக்கின்றனர். மழை வந்த பின் பாதிப்பு ஏற்பட்டால், வரலாறு காணாத மழை எனக் கூறி தப்பிக்கின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்தோம். இப்போது ஐ ஏ.எஸ்., அதிகாரிகள் யார் என்று தெரியவில்லை. முதல்வர், அமைச்சர்கள் எதையும் ஆய்வு செய்யவில்லை. மகன் உதயநிதியை வைத்து ஆய்வு செய்கிறார். உதயநிதிக்கு என்ன முன் அனுபவம் உள்ளது. அனுபவம் உள்ள அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, கே. கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன், எ.வ.,வேலு இல்லாமல் தனியாக ஆய்வு செய்து வருகிறார்.

அதிகாரிகள், துறை அமைச்சர்கள் கூறுவதை செய்வார்களா, துணை முதலமைச்சர் செல்வதை செய்வார்களா என்கிற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் தள்ளி வைக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள், என்றார்.

Advertisement