--அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழை காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறை சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக மழை எதிர்பார்த்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த லேசான மழையால் ஈரப்பதம் பெற்றது. நேற்று முன்தினம் இரவு, நேற்று மதியம் முதல் பெய்த கனமழையால் ராஜபாளையம் மாவரிசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு ஆற்று நீர் தடுப்பணை மூலம் நீர் திருப்பி விடப்பட்டு தேக்கப்படுகிறது. அதிகரித்த நீர் தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் வழிந்து செல்கிறது.

இதே நிலை தொடர்ந்தால் புதுக்குளம், பிரண்டை குளம், புளியங்குளம் போன்ற அடுத்தடுத்து உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என விவசாயிகள், எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் நீர்வரத்து காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement