கூமாபட்டி -கிழவன் கோயில் மேம்பால பணிகள் தீவிரம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியில் இருந்து கிழவன் கோயில் செல்லும் ரோட்டில் உள்ள தரை பாலம் மேம்பாலமாக உயர்த்தி கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் மற்றும் கன்மாய்கள் நிரம்பி மழை நீர் வெளியேறும் பட்சத்தில் கிழவன் கோயில் தரைப்பாலத்தின் வழியாக அதிகளவில் தண்ணீர் செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு விவசாயிகளும், மக்களும் பாதிப்படைந்து வந்தனர்.

பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றால் பஸ்கள் இயக்கப்பட முடியாமல் கிழவன் கோவில் மக்கள், கூமாபட்டி, வத்திராயிருப்பிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. எனவே, தரைப் பாலத்தை உயர்த்தி கட்டி மேம்பாலமாக அமைத்து தர வேண்டுமென அப்பகுதி விவசாயிகளும், மக்களும் கோரி வந்தனர். இதையடுத்து ரூ.2 கோடியில் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது; தற்போது தரை பாலம் மேம்பாலமாக உயர்த்தி கட்டும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முழு அளவில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.

Advertisement