சுக்கிரவார்பட்டி, சின்னத்தம்பியாபுரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் அவதி

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த மழையில் சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி, சாத்துார் அருகே சின்னத்தம்பியாபுரத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிரமமடைந்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கனமழை பெய்தது. இதில் திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டியில் பெய்த கன மழையில் கிழக்குத் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்த நிலையில் மக்கள் அவதிப்பட்டனர். குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

வீடு முழுவதும் தண்ணீர் இருந்ததால் புழங்குவதற்கு வழி இன்றி தவித்தனர். கிழக்கு தெரு பகுதி தாழ்வாக இருந்ததால் தண்ணீர் வெளியேற வழி இன்றி வீடுகளுக்குள் புகுந்தது. இப்பகுதியில் வாறுகால் அமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதே போல் சாத்துார் அருகே சின்னத்தம்பியாபுரத்தில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்குபலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 8:30 மணி வரை நீடித்தது. கனமழையால் சின்னத்தம்பியாபுரம் கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது.

இந்த பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பியதை தொடர்ந்து மழைநீர் செல்ல வழி இன்றி கிராமத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் குளம் போல் தேங்கியது. தாழ்வாக இருந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டில் வசித்தவர்கள் இரவு முழுவதும் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.

சின்னத்தம்பியாபுரம் பகுதியில் உள்ளஓடைகளை துார்வாரி மழை நீர் செல்லநடவடிக்கை எடுக்கவேண்டும் எனமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement