ஸ்ரீவில்லிபுத்துாரில் பலத்த மழை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மதியம் 2: 45 மணி முதல் பலத்த சாரல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

நேற்று காலை 9:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது துளி துளியாக மழை பெய்து வந்தது. மதியம் 2: 45 மணிக்கு மேல் பலத்த சாரல் மழை பெய்யத் துவங்கியது. மாலை 6:00 மணியை கடந்தும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளிலும், பஸ் ஸ்டாண்ட், பெரிய மாரியம்மன் கோவில், பஜார் வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர். நகரின் பஜார் வீதி வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் ரோடுகளில் ஓடியது. ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் சன்னதி, வைத்தியநாத சுவாமி கோயில் வெளிப்பிரகார பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதேபோல் கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, கூமாபட்டி, மல்லி, செண்பகத்தோப்பு, மம்சாபுரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது.

Advertisement