கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை : கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( அக்.,16) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மட்டும் 42 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆர்டிஎஸ், ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

மேலும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

ஐகோர்ட்டிற்கும் விடுமுறை



அதிகனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை ஐகோர்ட்டிற்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக பதிவாளர் அல்லி அறிவித்து உள்ளார்.

Advertisement