பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ்!

13

சென்னை: சாம்சங் நிறுவனம், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், தொழிலாளர்களின் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பல கட்ட பேச்சு நடத்தியும் முடியவில்லை. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் முன்னின்று பேசியும் தீர்வு ஏற்படவில்லை.
போராட்டத்தை நடத்துவது, மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு சங்கம் என்பதால், அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டது.

போராட்டம் நடத்தும் சிஐடியு சங்கத்துக்கு ஆதரவாக, ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலையை குறை கூறி, எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அதன் பிறகு விவகாரத்தை தமிழக அரசு தீவிரமாக கையில் எடுத்தது.

பேச்சுவார்த்தையில் சமரசம்:



இதையடுத்துஅரசு, சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டதாகவும், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.


தொழில் அமைதி மற்றும் பொது அமைக்காக, போராட்டம் உடனடியாக கைவிட வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது.

மீண்டும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக எந்தவித பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிர்வாகத்திற்கு, தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக, சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.


மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு நிர்வாகமும், தொழிலாளர்களும் சமரசமாகினர்.

Advertisement