நொகனுாரில் 20 யானைகள் முகாம்; 'ட்ரோன்' மூலம் கண்காணித்து விரட்டும் பணி தீவிரம்
ஓசூர்: நொகனுார் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள, 20க்கும் மேற்பட்ட யானைகளை, 'ட்ரோன்' உதவியுடன் கண்காணித்து, கர்நாடகாவிற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து குட்டிகளுடன் இடம் பெயர்ந்துள்ள, 85க்கும் மேற்பட்ட யானைகள், தளி, ஜவளகிரி மற்றும் நொகனுார் காப்புக்காட்டில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. அவற்றை தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி வனச்சரக அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என, 80க்கும் மேற்பட்டோர் கண்காணித்து வருகின்றனர். நொகனுார் வனப்பகுதியில், மூன்று குழுக்களாக முகாமிட்டுள்ள யானைகள், மட்ட மத்திகிரி, ஆலள்ளி, தாவரக்கரை, நொகனுார், மரக்கட்டா, அந்தேவனப்பள்ளி, கேரட்டி, ஒசட்டி, கண்டகானப்பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களை ஒட்டி சுற்றித்திரிகின்றன. மேலும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் நடமாட்டத்தை ட்ரோன் உதவியுடன், வனத்துறையினர் கண்காணித்து அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நொகனுார் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள, 20க்கும் மேற்பட்ட யானைகள், எந்த நேரத்திலும் ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. அவ்வாறு இடம் பெயர்ந்தால், விவசாய பயிர்கள் சேதம் அதிகரிப்பதுடன், மனித உயிரிழப்புகளும் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், இரவிலும் நவீன தொழில்நுட்ப உதவியுடன், யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
யானைகளை, கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நொகனுார் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள், இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம், ஆடு, மாடு மேய்க்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம், இரவில் விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.