சிறுதானியங்களுக்கு அரசின் கொள்முதல் மையம் தேவை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யலாம்
மதுரை : நெல்லுக்கு இருப்பதை போல கொள்முதல் மையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை விலைக்கு அரசு வாங்கி ரேஷன் கடைகள் மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்தவிலையில் விற்க முன்வரவேண்டும்.
கடந்த ஏப்ரலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு பின் தமிழகத்தில் டெண்டர் குளறுபடியால் துவரம்பருப்பு, பாமாயிலுக்கு தொடர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஓரளவு சீரமைக்கப்பட்டாலும் தற்போது வரை 65 சதவீத கார்டுதாரர்களுக்கே துவரம்பருப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாதத்திற்கான பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை, சீனி, துவரம்பருப்பு, பாமாயில் அனைத்தும் ஒரே நாளில் கடையில் வழங்கப்படுவதில்லை. ஒரு மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு நுகர்வோரும் குறைந்தது 3 நாட்கள் 3 முறை நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. .
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக துவரம்பருப்பு கிலோ ரூ.30க்கு ரேஷன் கடையில் விற்கப்படுகிறது.
வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.140 - ரூ.150 வரை. மாதந்தோறும் கோதுமை, பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இரண்டு மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும். சென்னை அல்லது அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு சென்று தான் மீண்டும் கார்டை வாங்க முடியும் என கடை விற்பனையாளர்கள் பயமுறுத்துகின்றனர். நுகர்வோர் அவஸ்தையை சந்திக்கின்றனர்.
டெண்டரில் மாற்றம் தேவை
துவரம்பருப்பு டெண்டர் அடிக்கடி மாற்றப்படுவதால் சீரான விநியோகம் இல்லை. கோதுமை வரத்து சீராகும் என 2 மாதங்களாக அறிவிப்பு தான் வருகிறது, நடைமுறையில் இல்லை. டெண்டர் தேதி காலாவதியாவதற்கு முன்பாகவே அடுத்த டெண்டர் விடப்பட்டு தயாராக இருந்தால் விநியோக தாமதம் ஏற்படாது.
சிறுதானிய கொள்முதல் மையம் தேவை
மாதம் 3 கிலோ கோதுமை வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ அளவு கூட வழங்குவதில்லை. தமிழகத்தில் பரவலாக கேழ்வரகு, கம்பு தானியங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். நெல்லுக்கு அரசு கொள்முதல் மையங்கள் அமைக்கிறது. அதே முறையில் கம்பு, கேழ்வரகுக்கு கொள்முதல் மையம் அமைத்து வாங்கினால் சிறுதானிய சாகுபடி பரப்பளவையும் அதிகரிக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் கோதுமைக்கு மாற்றாக கேழ்வரகு, கம்பு தானியங்களை பயன்படுத்த முடியும்.
நுகர்வோரின் அதிருப்தியை மாற்ற தமிழக அரசு பருப்பு டெண்டரில் கவனம் செலுத்த வேண்டும். சிறுதானிய கொள்முதல் மையம் அமைக்க முன்வரவேண்டும்.