இதற்கோர் வழி காணுங்க ; தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அதிகரிக்கும் கூலி விவசாய கருவிகள் எண்ணிக்கையை அதிகபடுத்துங்க
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தினக்கூலி உயர்ந்துள்ள நிலையில் வேளாண் தொழில் தொய்வின்றி நடக்க வேளாண் பொறியியல் துறைகளில் உள்ள விவசாய கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. பாசன நிலங்களை காட்டிலும் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளதால் வானம் பார்த்த பூமியாக உள்ளது. மழை நன்றாக பெய்தால் தான் இங்கு விவசாயம் சூடு பிடிக்கும். மாவட்டத்தில் வறட்சி நிலவும் போது கூலித் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர்.
இதனால் பல விவசாயக் கூலி தொழிலாளர்கள் பிழைப்பை தேடி திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களை நோக்கி சென்று விட்டனர். மீதி உள்ள தொழிலாளர்களில் பலர் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால் விவசாய கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.
இதன் பற்றாக்குறையை போக்க அனைத்து விதமான விவசாய கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு, குறு , ஏழை விவசாயிகளுக்கு இவை எட்டாக்கனியாகவே உள்ளது. மானாவாரி நிலங்களில் பெய்யும் மழையை பயன்படுத்தி ஒரே நேரத்தில் உழவு, விதைப்பு, அறுவடை என செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வேளாண் பொறியியல் அலுவலகங்களில் விவசாய கருவிகள் குறைவாக உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் கொடுக்கப்படுவதால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஒன்றிய அளவில் முன்னுரிமை அடிப்படையில் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
.............
எண்ணிக்கையை அதிகப்படுத்துங்க
மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளதால் மழை பெய்தவுடன் நிலத்தில் உள்ள ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும் என்பதால் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். வேளாண் தொழில் சூடு பிடிக்கும் நேரங்களில் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்வதாலும் தொழிலாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.
விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவர்களின் சம்பளம் உயர்ந்து விட்டது. பெண் கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500, ஆண் தொழிலாளர்கள் ரூ. 700 கொடுக்க வேண்டியுள்ளது. இடைவெளியில் டீ, வடை கொடுத்தும் கவனிக்க வேண்டியுள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க வேளாண் பொறியியல் அலுவலகங்களில் உள்ள விவசாய கருவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். விவசாய கருவிகள் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் படி வழிவகை செய்ய வேண்டும்.
- கந்தசாமி, விவசாயி, அப்பியம்பட்டி