ஆடுகளை தாக்கும் 'துள்ளுமாரி' தடுப்பூசி செலுத்த அறிவுரை

பனமரத்துப்பட்டி: பருவ மழை, குளிர் காலங்களில் ஆடுகளை துள்ளுமாரி நோய் தாக்க வாய்ப்புள்ளதால் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், கால்நடை அறிவியல் உதவி பேராசிரியர் கோகிலா கூறியதாவது: மழை காலங்களில் கொட்டகையில் தண்ணீர் தேங்காமல் சுத்தப்படுத்தி, கொசு, நுண் கிருமிகள் உற்பத்தியை தடுக்க வேண்டும். கிருமி நாசினியான சுண்ணாம்பு துாளை, ஈரப்பதம் உள்ள இடங்களில் துாவி விட வேண்டும்.

துள்ளுமாரி நோய், நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இது மண், ஆடுகளின் குடற்பகுதியில் காணப்படும். ஆடுகள், மாவு சத்து நிறைந்த தீவனம், மழைக்கு பின் புதிதாக முளைத்த பசும் புல் ஆகியவற்றை அதிகளவில் சாப்பிட்டால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பெருகி, நச்சுப்பொருளை உண்டாக்கும். அவை குடற்பகுதியில் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் கலப்பதால் ரத்தக்குழாய், நரம்பு மண்டலத்தை பாதிக்கும். ஆடுகள் வயிற்று வலியால் கத்தியபடியே இருக்கும். கழுத்து வளைந்து கால்கள் பின்னி வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழுந்து இறக்க நேரிடும். துள்ளுமாரி நோய் வராமல் தடுக்க ஆடுகளுக்கு, 6 வார வயதில் முதல் தடுப்பூசி, ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement