பூங்காவில் இருந்த 25 புலிகளை காணோம்... விசாரணை குழு அமைத்தது ராஜஸ்தான்!
ஜெய்ப்பூர்: ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த குழு ஒன்றை ராஜஸ்தான் அரசு அமைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது ரந்தம்பூர் தேசிய பூங்கா. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி உள்ளார்.
இந்த புலிகள் காப்பகத்தில் மட்டும் 75 புலிகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் மாயமாகி இருப்பது ராஜஸ்தான் மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைடுத்து, மாநில அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.
இதுகுறித்து தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி இருப்பதாவது; 2 மாதங்களில் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்கும். கண்காணிப்பு பற்றிய வாராந்திர அறிக்கையை ஆய்வு செய்யும்போது புலிகள் கேமராவில் சிக்காதது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரந்தம்பூர் பூங்காவில் புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்படுவது முதல்முறை அல்ல. 2022ம் ஆண்டில் 13 புலிகள், காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.