எல்லாம் எலான் செயல்... டிரம்ப் வெற்றிக்கு கை கொடுத்த காரணிகள்!

3

வாஷிங்டன்: கடும் போட்டி, துப்பாக்கிச்சூடு என பல நெருக்கடிகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


@1brஉலக நாடுகளின் பெரியண்ணன் என்று வர்ணிக்கப்படும் வல்லரசான அமெரிக்க நாட்டு அதிபர் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளி வந்து விட்டன. குடியரசுக்கட்சி வேட்பாளர், முன்னாள் அதிபரான டிரம்ப், ஜனநாயகக்கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

பெரும்பான்மைக்கு தேவையான 270 என்ற மேஜிக் எண்ணை டிரம்ப் எட்டிவிட, அவரது ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். டிரம்பின் வெற்றியை அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துவிட, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.

தேர்தல் கால அரசியலை உன்னிப்பாக கவனித்தவர்கள் டிரம்பின் தேர்தல் வெற்றி அவ்வளவு எளிதானதாக இல்லை என்கின்றனர். தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்த தருணம் முதலே கடும் போட்டிகளுக்கு இடையேதான் பிரசாரத்தை அவர் முன் வைத்து சென்றார்.

பல மாதங்கள் முன்னரே பிரசாரத்தை டிரம்ப் துவக்கினார். தொடக்க கால பிரசாரத்தில் எங்கு சென்றாலும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்து வந்தது. தேர்தல் நேரத்தில் அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்புக்கு எதிராக இருந்தவர் ஜோ பைடன். குறுகிய காலத்தில் போட்டியில் இருந்து பைடன் விலகுவதாக அறிவிக்க, அவரின் இடத்துக்கு வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.

கமலா ஹாரிஸ், ஆப்ரிக்க, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். துணை அதிபராகவும் உள்ளவர் என்பதால் டிரம்புக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. பைடன் வேட்பாளர் என்ற சமயத்தில் டிரம்பின் வெற்றி பிரகாசம் என்று அந்நாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் வெளியாக, அமெரிக்க அரசியல் களத்தை சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் உற்றுநோக்க ஆரம்பித்துவிட்டன.

பிரசார களத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த தருணத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசாரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது பறந்த வந்த தோட்டா, டிரம்ப் காதில் மேல்பகுதியை உரசிச் செல்ல ஒரு கணம் ஆதரவாளர்கள் அதிர்ந்து போயினர்.

காதில் ரத்தம் வழிய, கை முஷ்டியை உயர்த்தி, டிரம்ப் கோஷமிட்ட அந்த படமும், வீடியோ காட்சியும் உலகெங்கும் வைரல் ஆனது. டிரம்ப்பை அத்தனை காலமும் விமர்சித்த பலரும், அந்த நிகழ்வை கண்டு அவரது மன உறுதியை பாராட்டினர். அந்த சம்பவம், அமெரிக்க வாக்காளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போதும் டிரம்ப் உயிர்தப்பினார். 3 மாதங்களில் இருமுறை துப்பாக்கிச்சூடு என்பது எளிதாக எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

அதன் பின்னர் மக்களை சந்தித்து தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கினார் டிரம்ப். அவருக்கு ஈடாக போட்டியாளர் கமலா ஹாரிசும் ஈடுகொடுக்க அமெரிக்க தேர்தல் களமே பிரசார அனலில் தகித்தது. அதிபரானால் நாட்டின் முன்னேற்றத்துக்கு செய்ய வேண்டியது என்ன என்று இருவரும் பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.

நாட்கள் கரைய, கரைய கடும் போட்டியாளராக விளங்கினார் கமலா ஹாரிஸ். அதே நேரத்தில் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மிகவும் வெளிப்படையாகவே டிரம்புக்கு ஆதரவை தெரிவித்தார்.
டிரம்ப் பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தர தயார் என்று எலான் மஸ்க் அறிவித்தார். தேர்தல் பிரசாரக்களத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி ரெடி என்று டிரம்பும் தம் பங்குக்கு கொளுத்திப் போட்டார்.

டிரம்பின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து எலான் மஸ்கும் நான் தயார் என்று பதில் அறிவிப்பை வெளியிட மெல்ல, மெல்ல நிலைமைகள் மாற தொடங்கின என்கின்றனர் சர்வதேச அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.

வெளிப்படையான ஆதரவு போதாது என்று தினமும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது எனலாம்.

தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்க முன்னேற்றம் பற்றிய தமது எதிர்கால திட்டங்களை டிரம்ப் அறிவித்தாலும் எலான் மஸ்கின் முழு ஆதரவு முக்கிய திருப்பமாக அமைந்தது என கூறலாம். தேர்தல் முடிவு வெளியான நாளில் கூட நிமிடத்துக்கு நிமிடம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவுகளை விடாமல் மாற்றிக் கொண்டே இருந்தார் எலான் மஸ்க்.

டிரம்ப் அதிபராகிறார் என்று முடிவுகள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் லைக் பொத்தானை இதய வடிவில் சிவப்பாக மாற்றி தமது சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார் மஸ்க். பிரசாரக்களத்தில் வெற்றிக்கு எத்தனையோ காரணிகள் இருந்தாலும் சூறாவளியாய் மக்களிடம் ஆதரவு திரட்டியது, 2 முறை நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, எலான் மஸ்கின் கணக்கிலடங்கா ஆதரவு போன்ற காரணிகள் டிரம்புக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.

தேர்தலில், இந்த 3 காரணிகளை பின்தள்ள எத்தகைய தயாரிப்புகளை முன்னெடுத்தார் என்ற பிரதான கேள்வியில் கமலா ஹாரிசின் தோல்வி ஒளிந்திருக்கிறது என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.
அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்து, அடுத்த தேர்தலில் தோற்று, பின்னர் 3வது முறையாக வென்று தற்போது பெரியண்ணன் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார் டிரம்ப்.

Advertisement