கடவுள் என்னைக் காப்பாற்றியது இதற்குத்தான்; அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் நெகிழ்ச்சி!
வாஷிங்டன்: 'கடவுள் இந்த ஒரு காரணத்துக்காகத் தான், கொலை முயற்சி சம்பவங்களில் இருந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்,' என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
வீண் போகாது
அமெரிக்கா மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். பிரச்னைகளை தீர்ப்பேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். மக்கள் என்னை நம்பி தான் ஓட்டளித்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது. அமெரிக்கா மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். எண்ணில் அடங்காத தடைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளேன். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
மஸ்குக்கு நன்றி
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. நாட்டை சீரமைத்து மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு முக்கியமான நபர் எலான் மஸ்க்; எனக்கு ஆதரவளித்த X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்குக்கு நன்றி.
900க்கும் மேற்பட்ட பிரசாரங்கள் மேற்கொண்டு, அந்த பிரசாரங்களின் பலனாக வெற்றி சாத்தியமாகி உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை அமெரிக்க மக்களுக்கு உறுதி செய்யப் போகிறோம். உலகிலே மிக முக்கியமான பொறுப்பு அமெரிக்க அதிபர் பொறுப்பு. அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.
உழைப்பு
துணை அதிபராக தேர்வாகும் ஜே.டி.வான்ஸ்க்கு வாழ்த்துகள். கடும் உழைப்பாளிகளான அமெரிக்கர்களுக்கு நன்றி, உங்கள் அன்பிற்கு காணிக்கையாக எங்கள் உழைப்பை தருவோம். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடம் நம்மிடம் உள்ள அளவிற்கு எண்ணெய் வளங்களோ, பிற வளங்களோ இல்லை.
கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார் என்று பலர் என்னிடம் கூறினர்.
நம் நாட்டைக் காப்பாற்றவும், அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றவும் தான் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நாம் அந்த கடமையை நிறைவேற்றியே தீருவோம். இவ்வாறு டிரம்ப் பேசினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். உஷாவின் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், 'அமெரிக்கர்கள் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும்' என்றார்.