சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

5

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2010ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, சமீபத்தில் நடந்த தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியைப் பிடித்தது.


இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்குப் பின், சட்டசபைக் கூட்டத்தொடர் துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கியதும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் ரஹீம் ராத்தர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (நவ.,06) ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும், இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.


இதில் திருப்தியடையாத பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கடும் அமளிக்கு மத்தியில் சட்டசபையில் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement