அமெரிக்கர்களுக்கு ஆம்பளைகளைத் தான் பிடிக்குமா : பெண் அதிபரை தேர்வு செய்ய மறுப்பது ஏன்?

11

பெண்ணுரிமை, சமத்துவம், மனித உரிமை பற்றியெல்லாம் வாய் கிழிய பேசும் அமெரிக்கர்கள், தங்களது 248 ஆண்டு வரலாற்றில் ஒரு பெண் அதிபரைக் கூட தேர்வு செய்ததில்லை என்பது வினோதத்திலும் வினோதம்.

1776ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது அமெரிக்கா. அதன் பிறகு அது தான் உலகின் ஆகப்பெரும் சுதந்திர நாடானது. அங்குள்ள ஜனநாயகத்திற்கு எல்லையே இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பேசலாம். அவையெல்லாம் அவர்களது தனி உரிமை. யாரும் தலையிட முடியாது. அங்கு சட்டங்கள் அப்படித் தான் இயற்றப்பட்டன.

ஆனால் அப்போது இருந்து எந்த தேர்தலிலும் ஒரு பெண்ணை அமெரிக்கர்கள் தங்களை ஆளும் அதிபராக தேர்வு செய்ததில்லை. 1960ம் ஆண்டிலேயே ஒரு பெண்ணை அதாவது சிரிமாவோ பண்டாரநாயகேயை பிரதமராக தேர்வு செய்தது தம்மாத்துண்டு நாடான இலங்கை.

அதன் பிறகு இந்தியாவில் இந்திரா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் கூட தங்கள் பிரதமராக கோல்டா மேயர் என்ற பெண்ணை தேர்வு செய்தது. அப்புறம் அமெரிக்கா உருவாக காரணமாக இருந்த பிரிட்டனின் பிரதமராக மார்க்ரெட் தாட்ச்சர் என்ற பெண் 1979 முதல் 1990 வரை இருந்தார். 1986ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அதிபராக அகீனா என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் கூட பெனாசிர் பூட்டோவை பிரதமராக தேர்வு செய்தது. இன்னொரு இஸ்லாமிய நாடான துருக்கியில் தன்சு சில்லர் என்ற பெண் 1993 முதல் 1996 வரை பிரதமராக இருந்தார்.

இப்படி பல நாடுகள் தங்கள் ஆட்சியாளராக பெண்களை தேர்வு செய்த போதும், அமெரிக்கா மட்டும் பெண்களை புறக்கணித்தே வந்திருக்கிறது. தற்போது நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹாரிசுக்கு அமெரிக்கர்கள் பெரும்பான்மையாக ஓட்டளிக்கவில்லை.

இது பற்றி அங்கு பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்க வாக்காளர்கள், பெண்களை விட ஆண்கள் திறமையானவர்கள் என்று நினைப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் ஒரு பெண் வேட்பாளராகி விட்டால், அவரைப் பற்றி பொய்களும் புரட்டுகளும் போலி செய்திகளும் கட்டவிழ்க்கப்படுகின்றன. இவற்றை பல அமெரிக்கர்கள் நம்பிவிடுகின்றனர்.

அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதே கூட மிகவும் தாமதமாகத் தான். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1920ம் ஆண்டு தான் அங்கு பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது. இதுவே பெண்களுக்கு அங்கு முழு உரிமை தரப்படுவதில்லை என்பதற்கு சாட்சி என்கின்றனர் பெண் உரிமை போராளிகள். சுதந்திர தேவி என்று ஒரு பெண்ணை உருவகப்படுத்தி சிலை வைக்க தெரிந்த அமெரிக்கர்களுக்கு ஒரு பெண்ணை அதிபராக்க தெரியவில்லை.

ஆக, அமெரிக்காவில் பேச்சு ஒன்றும் செயல் வேறாகவும் இருப்பதையே இது காட்டுகிறது.

Advertisement