அதிபர் தேர்தலில் வெற்றி; வரலாறு படைத்தார் டிரம்ப்!

34

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அதிபராக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.



உலகின் பல நாடுகளில் தேர்தல் நடந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே ஸ்பெஷல். இம்முறை நடைபெற்ற அதிபர் தேர்தல் கடந்தகால தேர்தல்களின் போது நிகழ்ந்த பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருக்கிறது.

நடப்பு தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர், முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயகக்கட்சி வேட்பாளர், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையேதான் போட்டி. ஓட்டுப்பதிவு முடிந்து முடிவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் உள்ள 538 பிரதிநிதிகளில் 270 பேர் ஆதரவு பெறும் வேட்பாளர் தேர்தலில் அதிபராக வெற்றி பெற முடியும். தொடக்கம் முதலே டிரம்ப் அபரிமிதமான முன்னிலையில் இருந்தார்.

கடிகார முள்ளின் வேகம் நகர, நகர முன்னிலை நிலவரத்தில் வித்தியாசம் இருந்ததே தவிர வேறு முக்கிய மாற்றங்கள் காணப்படவில்லை. தேர்தல் முடிவு வெளியான நிமிடத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னரே டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே உள்ள போட்டி குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில் கமலா ஹாரிசுக்கு 48 சதவீதம் மக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்றும், டிரம்புக்கு மக்கள் ஆதரவு 44 சதவீதம் உள்ளது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது.

தனக்கு எதிரான பல்வேறு எதிர்மறை விவகாரங்களையும் பின்னுக்குத் தள்ளி டிரம்ப் முன்னிலைக்கு வந்து விட்டதாக கணிப்புகள் வெளியாகின. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக கூட பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், 'டிரம்ப் அதிபர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்' என்று செய்தி வெளியிட்டது.

இன்னொரு பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவிக்க இருந்ததாகவும், அதை அந்த பத்திரிகையின் உரிமையாளர் நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படி பல்வேறு எதிர்மறை தகவல்கள் வெளியான நிலையிலும், வாக்காளர்கள் மனதில் இடம் பிடித்து டிரம்ப் கூடுதல் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது எண்ணப்பட்டது வரை, மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அவர், கமலாவை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார்.

தற்போது வரை டிரம்ப் 277 எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளையும், கமலா 226 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர். இன்னும் டிரம்ப் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் கமலா ஹாரீஸ் கனவு, பகற்கனவாகி விட்டது உறுதி செய்யப்பட்டு விட்டது. இன்னும் சற்று நேரத்தில் டிரம்ப் நாட்டு மக்கள் மத்தியில் வெற்றி உரையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement