பயணிகள் அமர்வதற்கு வசதியில்லை பஸ் ஸ்டாண்டில் தொடரும் அவலம்
பயணிகள் அமர்வதற்கு வசதியில்லை
பஸ் ஸ்டாண்டில் தொடரும் அவலம்
கரூர், நவ. 8-
கரூர் பஸ் ஸ்டாண்டில், அமர்வதற்கு கூட இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டில், திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் செல்கின்றன. டெக்ஸ்டைல்ஸ், பஸ் பாடி கட்டும் தொழில் மற்றும் கொசுவலை உற்பத்தி தொழில் மையமாக கரூர் உள்ளது. நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் திருச்சி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர்.
இங்கு, பயணிகள் அமர்வதற்கு கூட வசதி இல்லாமல், பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இடநெருக்கடி உள்ள பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணிகள், பஸ்கள் வேகமாக வரும் போது, ஓடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மதுரை, திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் வணிக வளாக கட்டடத்தில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்ல இருக்கை வசதி இருந்தது. அதுவும் பழுதடைந்ததால், இடிக்கப்பட்டுள்ளது.
கரூரில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மழைக்காக ஒதுங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரூரில் கோடை காலத்தில் கடுமையான வெயில் அடித்த போதும் இதே நிலைதான். மழை மற்றும் வெயிலுக்காக பிளாட்பாரத்தில் ஒதுங்கும் பயணிகளை, வியாபாரிகள் தகாத வார்த்தை பேசி விரட்டுவது தொடர்கதையாக உள்ளது. உடனடியாக பயணிகள் உட்காரும் வகையில், இருக்கை வசதி செய்து தர வேண்டும். மேலும், சுகாதாரமான குடிநீர் வசதியை ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.