வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் அவதி அறநிலைய துறையின் அலட்சியம் காரணமா?
நாகப்பட்டினம்:நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலர் கோவில் உள்ளது. முருகபெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான், முருகபெருமான், அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியில், பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், பாதுகாப்பிற்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், நேற்று முன்தினம் இரவு நடந்த சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது, கோவில் நிர்வாகத்தினர் அலுவலகத்திலேயே முடங்கி கிடக்க, நிகழ்ச்சி முழுதும் போலீசார் கட்டுப்பாட்டில் நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அதிலும் பெரும்பாலான போலீசார் வி.வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தினர். இதனால் பெண் பக்தர்கள், வயதானவர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.
நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் காண வந்த பக்தர்கள் நொந்து வெளியேறினர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்கும் வேல் வாங்கும் நிகழ்ச்சியை வழிநடத்த வேண்டிய அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியூர் சென்று விட்டார்.
துணை ஆணையர் தவிர்க்க முடியாத காரணத்தால் கோவிலுக்குள் வர இயலாத சூழல். செயல் அலுவலர் அலுவலகத்தை விட்டு வெளியே வராததால், பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.