சூரசம்ஹாரம் கோலாகலம்

திருப்பூர்; வெல்ல முடியாதவன் கந்தப்பெருமான்; இதை உணராமல்தானே சூரன் மோதுகிறான்! பதம் பணியாதபோது, சிரங்களை வேல் கொய்கிறது.

'காக்கக் காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட'

பக்தர்கள் பரவசம் பொங்கப் பாடுகின்றனர்; 'அரோஹரா' கோஷம் விண் முட்டுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த வாரம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்ரமணியர் சன்னதி, நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் - சுப்ரமணியர் சன்னதி, வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில், கொங்கணகிரி கந்தப் பெருமாள் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கந்த சஷ்டி துவங்கியது முதல் தினமும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது. பெரும்பாலான கோவில்களில் தினமும், பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் திருவீதியுலா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பல்வேறு பதிகங்கள் பாடி முருகப் பெருமானை துதித்து வழிபாடு செய்தனர்.

நேற்று நிறைவாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தப் பெருமான், சூரசம்ஹாரம் நடத்தினார். இதில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், கொங்கணகிரி கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் முன்புறம் இந்த சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், அரோஹரா என்று கோஷம் எழுப்பியபடி பரவசத்துடன் இதை தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி நிறைவாக இன்று முருகன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. அதன் பின், கந்த சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

Advertisement