டிரம்ப் மீண்டும் அதிபர் ஏற்றுமதி எழுச்சி பெறுமா?

திருப்பூர் ; ''டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ளதால், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும்'' என, திருப்பூர் பின்னலாடை துறையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இரண்டாவது முறையாக மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகியிருப்பது, இந்தியாவுக்குச் சாதகமானதாக கருதப்படுகிறது. டிரம்ப்பின் சீன எதிர்ப்பு கொள்கை; நம் பிரதமருடன் அவர் கொண்டுள்ள நட்பு; பைடன் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளிட்ட காரணங்கள், திருப்பூர் பின்னலாடைத்துறைக்கும் சாதகமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் ஸ்திரமாகும்



பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:

அமெரிக்காவில், ஜனநாயக கட்சியை விட, குடியரசு கட்சி ஆட்சி அமையும்போது, அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். அதனால், உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்தப் போர் நின்றால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும். ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும்.

ஒப்பந்தம் நிறைவேறும்



சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் டிரம்ப். ஏற்கனவே இவரது பதவி காலத்தில்தான், சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, டிரம்ப்பின் வருகையால் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

டாலருக்கு மாற்றாக பொதுவான கரன்சியை கொண்டுவர இந்தியா உள்பட 'பிரிக்ஸ்' நாடுகள் முயற்சித்துவருகின்றன. இதனால், டாலர் ஸ்திரத்தன்மை இழப்பதை டிரம்ப் விரும்பமாட்டார். இந்தியாவில் சில அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பார். இதுபோன்ற ஒருசில பாதகங்களும் உள்ளன.

நன்மையில் முடியும்



சாதக, பாதகங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் டிரம்ப்பின் வெற்றி, இந்தியாவுக்கு நன்மை தருவதாகவே அமையும். நம் நாட்டுடன், குறிப்பாக, பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு கொண்டுள்ளார். அதனால், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு பாதகமான அம்சங்கள் விலகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்றுமதியாளருக்கு சாதகம்



இந்தியா - அமெரிக்கா இடையிலான ஏற்றுமதி வர்த்தகம், ஸ்திரத்தன்மையோடு சிறப்பாகவே உள்ளது. டிரம்ப் அதிபராகியுள்ளதால், அமெரிக்க சந்தை மீது கூடுதல் நம்பிக்கை பிறந்துள்ளது. சீன பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அமெரிக்காவுக்கான இந்திய பின்னலாடை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.

- 'ஈஸ்ட்மேன்' சந்திரன்,

முன்னாள்

துணைத்தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.

Advertisement